டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
மடத்துக்குளம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
மடத்துக்குளம்,
மடத்துக்குளத்தையடுத்த கணியூர் பகுதியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகைமடத்துக்குளம் காரத்தொழுவு ரோட்டில் செக்கானோடை பகுதிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் நேற்றுகாலை முதல் டாஸ்மாக் கடை திறக்க திட்டமிடப்பட்டது. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 200–க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர். டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக்கோரி முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார்கள். ஆனால் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என மேல் அதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரிகிறது.
இதனால் டாஸ்மாக் கடை முன்பு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் மதுக்கடையை மூடும் வரை அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். இந்த நிலையில் லேசான சாரல்மழை பெய்யத்தொடங்கியதால் பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நிலங்கள் பாழாகும்போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில் “ வேறு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை அங்கே திறக்க முடியாத நிலையில் இந்த பகுதியில் திறந்துள்ளார்கள். சுற்றிலும் விவசாய விளைநிலங்கள் நிறைந்துள்ள பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையால் சுற்றியுள்ள விளைநிலங்கள் அதிகமாக பாழாகும் அபாயம் உள்ளது.
மேலும் விவசாயக்கூலி தொழிலாளர்கள் மதுவுக்கு அடிமையாகும் நிலையால் அவர்கள் குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
எனவே இந்த டாஸ்மாக் கடையை மூடும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் நாளை (இன்று) மீண்டும் கூடுவோம் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்கள்.
6 பாட்டில்கள் மட்டும்டாஸ்மாக் கடைக்கு எதிராக பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அப்போது டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு மதுபாட்டில்களும் அடித்து நொறுக்கப்படுகின்றன. எனவே கணியூர் பகுதியில் நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் 6 சிறிய மதுபாட்டில்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் எதிர்ப்பின் வேகத்தை அறிய அதிகாரிகள் செய்த சோதனை முயற்சியாகவே இது தோன்றுகிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.