அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கும் பணி


அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கும் பணி
x
தினத்தந்தி 7 Jun 2017 10:45 PM GMT (Updated: 7 Jun 2017 9:12 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான தமிழக அரசின் விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கும் பணியை முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி,

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பாடபுத்தகங்கள், மிதிவண்டி, சீருடை, மடிக்கணினி உள்பட 14 வகையான விலையில்லா கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. கோடைவிடுமுறைக்கு பின் பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே பாடபுத்தகங்கள் மற்றும் சீருடைகளை மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 212 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகள், 1162 அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள், சீருடைகள் நேற்று வழங்கப்பட்டன.

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தங்கள், சீருடைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

அரசு பள்ளிகள் வளர்ச்சி

தமிழக அரசு கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை மாணவ-மாணவிகள் பயமின்றி எதிர்கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்து வருகின்றன.

இதன் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு வழங்கும் விலையில்லா பொருட்கள் மற்றும் சலுகைகளை பெற்று மாணவ-மாணவிகள் சிறப்பான முறையில் கல்வி கற்க வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு தற்போது அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கு மாணவ-மாணவிகள் இப்போதிருந்தே தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை தெரசா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பழனிசாமி, பி.மல்லாபுரம், அஜ்ஜம்பட்டி, போதக்காடு ஆகிய ஊர்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார்.


Next Story