மாற்றுத்திறனாளிகளுக்கான உலக ‘செஸ்’ போட்டியில் 5-வது முறையாக தங்கம் வென்றார் ஜெனித்தா


மாற்றுத்திறனாளிகளுக்கான உலக ‘செஸ்’ போட்டியில் 5-வது முறையாக தங்கம் வென்றார் ஜெனித்தா
x
தினத்தந்தி 7 Jun 2017 11:00 PM GMT (Updated: 7 Jun 2017 9:13 PM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் 5-வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்த திருச்சி ஜெனித்தா தனக்கு அர்ஜுனா விருது வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.

திருச்சி,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது உலக தனிநபர் செஸ் போட்டி சுலோவேக்கியா நாட்டின் ருசம்பர்க் நகரில் மே 28-ந்தேதி முதல் ஜூன் 5-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவில் உலகம் முழுவதும் இருந்து 12 நாடுகளை சேர்ந்த 40 பேர் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்ட கே.ஜெனித்தா பங்கேற்றார். 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஜெனித்தா 5 சுற்றுகளில் வெற்றியும், 3 சுற்றுகளில் சமனும், ஒரு சுற்றில் தோல்வியும் கண்டார். 5.5 புள்ளிகள் எடுத்ததால் அவருக்கு சாம்பியன் பட்டமும், தங்க பதக்கமும் வழங்கப்பட்டது. ஜெனித்தா 5-வது முறையாக தங்கம் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் வரவேற்பு

போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஜெனித்தா நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு மக்கள் சக்தி இயக்கம், விளையாட்டு ஊக்குவிப்போர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு முடிந்த பின்னர் ஜெனித்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சர்வதேச அளவில் நடந்த போட்டியில் நான் இப்போது ஐந்தாவது முறையாக தங்கம் வென்று உள்ளேன். கடவுள் கிருபையாலும், எனது பெற்றோர் அளித்த ஊக்கத்தினாலும் எனக்கு இந்த பெருமை கிடைத்து உள்ளது. கடந்த முறை நான் தங்கம் வாங்கி வந்த போது தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா எனக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கினார். விளையாட்டுக்கு தேவையான உபகரணங்களும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கப்பட்டது. ஐந்து முறை நான் சாம்பியன் பட்டம் பெற்று இருப்பதால் தனக்கு மத்திய அரசின் அர்ஜுனா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


Related Tags :
Next Story