விபத்தில் படுகாயமடைந்த முதியவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் படுகாயமடைந்த முதியவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 8 Jun 2017 4:15 AM IST (Updated: 8 Jun 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் படுகாய மடைந்த முதியவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து பெரம்பலூர் கோர்ட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தம்பை கிராமத்தை சேர்ந்தவர் சின்னவன் (வயது 75). கடந்த 2006-ம் ஆண்டு பெரம்பலூரில் இருந்து அரசு பஸ்சில் தம்பை கிராமத்திற்கு சின்னவன் வந்து கொண்டிருந்தார். தம்பை கிராம பஸ்நிறுத்தத்தில் இறங்கிய போது கவனக்குறைவாக அரசு பஸ் டிரைவர் செயல்பட்டு பஸ்சை இயக்கினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சின்னவன் படுகாயமடைந்தார். விபத்தில் காயமடைந்ததற்கு திருச்சி அரசு போக்குவரத்து கழகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 4-6-2009-ல் சின்னவன் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி, ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்தை திருச்சி அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடாக சின்னவனுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அரசு பஸ் ஜப்தி

எனினும் அந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால் நிறைவேற்று மனுவை பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 21-6-2016-ல் சின்னவன் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம், விபத்தில் காயமடைந்த சின்னவனுக்கு இழப்பீடு வழங்காததால் பெரம்பலூருக்கு வரும் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும். மேலும் வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 766-ஐ இழப்பீடாக அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன் பேரில் வேலூரில் இருந்து புறப்பட்டு பெரம்பலூர் வழியாக திருச்சிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்தில் வைத்து நேற்று கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் ஜப்தி செய்யப்பட்ட பஸ் பெரம்பலூர் கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பஸ்சிலிருந்த பயணிகள் கீழே இறங்கி வேறு பஸ் பிடித்து தாங்கள் செல்ல வேண்டிய இடங் களுக்கு சென்றனர்.


Related Tags :
Next Story