கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு; ஆர்வத்துடன் மாணவ-மாணவிகள் வருகை


கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு; ஆர்வத்துடன் மாணவ-மாணவிகள் வருகை
x
தினத்தந்தி 7 Jun 2017 10:45 PM GMT (Updated: 7 Jun 2017 9:15 PM GMT)

பெரம்பலூர். அரியலூர் மாவட்டங்களில் கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

பெரம்பலூர்,

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படவில்லை. மேலும் பள்ளிகள் திறப்பு தாமதப் படுத்தப்பட்டு ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அந்த வகையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் அரசு, அரசுஉதவிபெறும், சுயநிதி பள்ளி, தனியார் பள்ளி என அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட்டன. மாணவ- மாணவிகள் விடுமுறைக்குப்பின் நண்பர்களை சந்திக்கும் உற்சாகத்திலும், தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்பிற்கு செல்லும் ஆர்வத்திலும் பள்ளிக்கு வருகை தந்தனர். பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை பரிசளித்து வாழ்த்து கூறி பள்ளியில் விட்டு சென்றதை காண முடிந்தது. விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் பெட்டி, படுக்கை, வாளி உள்ளிட்டவற்றுடன் விடுதிக்கு வந்தனர். பின்னர் அங்கு பொருட்களை வைத்து விட்டு பள்ளிக்கு வருகை தந்தனர். பள்ளியின் முதல் நாள் என்பதால் மாணவ-மாணவிகள் அனைவரும் புத்துணர்வுடன் காணப்பட்டனர். 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

படிப்பதோடு மற்ற திறன்களையும் வளர்த்து...

காலை 9 மணியளவில் அனைத்து பள்ளியிலும் வழக்கம் போல் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முதல் நாள் சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசுகையில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 க்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இது மாணவர்களின் திறமையை வளர்ப்பதற்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. முதல் அடியை உத்வேகத்தோடு எடுத்து வைத்தால் தான் கடக்க வேண்டிய தூரத்தை வெற்றிகரமாக கடந்து இலக்கினை அடைய முடியும். அந்த வகையில் இந்த கல்வி ஆண்டின் முதல் நாள் பள்ளிக்கு வந்திருக்கும் மாணவ-மாணவிகள் ஒழுக்கநிலை மாறாமல் பாடத்தை கவனித்து நன்கு படிக்க வேண்டும். அடிக்கடி பாடசந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோருக்கும் உதவிகரமாக செயல்பட வேண்டும். பாடம் படிப்பதோடு மற்ற திறன்களையும் மாணவர்கள் வளர்த்து கொண்டு வாழ்க்கையில் மேன்மையடைய இலக்கினை நோக்கி முன்னேறி வெற்றி பெறலாம் என்று கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜ் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாடப்புத்தகம்-சீருடை வினியோகம்

பெரம்பலூர் மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை, கணித உபகரணபெட்டி (ஜாமின்ட்ரி பாக்ஸ்), நோட்டு உள்ளிட்டவை வழங்கும் பணிகள் நேற்று தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. முதல் நாள் புத்தகத்தை பெற்றதும் மாணவ-மாணவிகள் அதனை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இதற்கிடையே மாணவர் சேர்க்கை, எஸ்.எஸ்.எல்.சி.-பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் என பள்ளிகளின் அலுவலகமும் பரபரப்புடன் காணப்பட்டது. சில பள்ளிகளின் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் ஆங்காங்கே விளையாடி கொண்டிருந்தனர். பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்படாத மாணவ-மாணவிகளுக்கு கணித சூத்திரங்கள், பொது அறிவு பாடங்கள், அறிவியல் விதிகள் உள்ளிட்ட பொதுவான பாடங்களை ஆசிரியர்கள் கற்பித்தனர்.

கல்வி அதிகாரிகள் ஆய்வு

இதற்கிடையே பள்ளிகளில் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறதா? வகுப்பறையில் போதிய இருக்கை வசதிகள் இருக்கின்றனவா? முதல் நாளில் மாணவ-மாணவிகளின் வருகை அரசு பள்ளியில் கணிசமாக உள்ளதா? என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இறுக்கமான ஆடைகள் அணிய கூடாது, பள்ளிக்கு செல்போன் எடுத்து வர கூடாது, மோட்டார் சைக்கிளில் வர கூடாது என பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

பின்னர் மாலையில் பள்ளி முடிந்ததும் முதல் நாள் பள்ளி அனுபவத்தை அசைபோட்டு கொண்டே மாணவ-மாணவிகள் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். பெற்றோரும் மாலையில் பள்ளிக்கு வந்து தங்களது குழந்தைகளை அழைத்து சென்றனர்.

அரியலூர் மாவட்டத்திலும்...

இதே போல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசுஉதவிபெறும், தனியார், சுயநிதி என அனைத்து வகை பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. காலை 7.30 மணி முதலே மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வரத்தொடங்கினர். முதல் நாள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை பெற்றோர் முத்தமிட்டு வாழ்த்து கூறி உற்சாகத்துடன் பள்ளியில் விட்டு சென்றனர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் பெட்டி, படுக்கை உள்ளிட்டவற்றை விடுதியில் வைத்து விட்டு பள்ளிக்கு வந்தனர். 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சாக்லெட் உள்ளிட்ட இனிப்புகளை வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர். காலை 9.30 மணியளவில் இறைவணக்க கூட்டத்தில் மாணவர்கள் பங்கேற்று விட்டு வகுப்பறைக்கு சென்றனர். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நடைபெறும் நாள் குறித்த அட்டவணையை அரசு முன்கூட்டியே வெளியிட்டது திட்டமிட்டு படிப்பதற்கு வசதியாக இருப்பதாகவும், பள்ளிக்கல்வியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தை விளக்கும் வகையில் இருப்பதாகவும் மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

அடிப்படை வசதிகள்

விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாகமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி, அரியலூர் மாதிரி பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை நேரில் பார்வையிட்டு மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் கே.ஒளி உள்ளிட்ட கல்விஅதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பள்ளியில் குடிநீர்வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? போதுமான அளவில் இருக்கை வசதிகள் வகுப்பறையில் உள்ளதா? என பார்வையிட்டனர்.

தினமும் இறைவணக்க கூட்டம் நடத்த...

பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.ஒளி கூறுகையில், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகள் துரிதமாக நடந்து வருகிறது. இன்று (நேற்று) திறக்கப்பட்டதால் பள்ளி மாணவர்களுக்கு புத்தக வினியோகம் தடையின்றி நடக்கிறது. இனி வரும் காலங்களில் பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தை தினமும் நடத்த வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளி நாட்களில் இறைவணக்க கூட்டத்தை நடத்துவதற்கு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு பள்ளிகளை கண்காணித்து மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு கவனத்துடன் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.


Related Tags :
Next Story