வெடி தயாரித்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் கலெக்டர் நடவடிக்கை


வெடி தயாரித்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Jun 2017 4:15 AM IST (Updated: 8 Jun 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே அரசு விதிகளை மீறி வெடி தயாரித்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க கலெக்டர் அண்ணாதுரை உத்தரவு பிறப்பித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஊராட்சி நாச்சியார்பட்டி கிராமத்தில் ரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பறையை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களை சந்தித்து பேசிய கலெக்டர், நியாயவிலைக்கடையில் அரிசி, மண்எண்ணெய், பாமாயில், சர்க்கரை, பருப்பு போன்றவை தரமாக வழங்கப்படுகிறதா? என்றும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுகிறதா? என்றும் கேட்டறிந்தார்.

பின்னர் அவர், கோவில்பட்டி கங்கை சமுத்திரவாய்க்காலில் 2½ கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் தூர்வாரப்படுவதை பார்வையிட்டு வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். அப்போது தொழிலாளர்களிடம் சம்பளம் முறையாக வழங்கப்படுகிறதா? என்று கேட்டார். தொடர்ந்து அவர், ஒரத்தூர் ஊராட்சி நத்தமங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு நன்றாக இருக்கிறதா? என ருசித்து பார்த்தார். மேலும் குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்களை கட்டாயம் கற்று கொடுக்க வேண்டும் என பயிற்றுனருக்கு அறிவுரை வழங்கினார்.

அபராதம்

கச்சமங்கலம் அணைக்கட்டு பகுதியை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். விண்ணமங்கலத்தில் மணிமாறன் என்பவர் வெடி தயாரித்து வருகிறார். அந்த இடத்திற்கு திடீரென சென்று கலெக்டர் ஆய்வு செய்தபோது அரசு விதிகளை மீறி வெடி தயாரித்தது தெரியவந்தது. இதனால் மணிமாறனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் தஞ்சை மாவட்டத்தில் வெடி தயாரிக்கும் உரிமையாளர்கள் முறையாக அனுமதி பெற்று அரசு விதிமுறைகளை பின்பற்றி வெடி பொருட்களை தயாரிக்க வேண்டும். வெடி பொருட்கள் தயாரிக்கும் இடத்தில் தீத்தடுப்பு சாதனம், வாளியில் மணல், தண்ணீர் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். அரசு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை எச்சரித்தார்.

தொடர்ந்து அவர், பாலையப்பட்டி, கோவிலடி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார்.


Related Tags :
Next Story