கரும்புக்கான நிலுவை தொகையை வழங்காததை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


கரும்புக்கான நிலுவை தொகையை வழங்காததை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2017 4:15 AM IST (Updated: 8 Jun 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே கரும்புக்கான நிலுவை தொகையை வழங்காததை கண்டித்து விவசாயிகள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல்மேடு,

நாகை மாவட்டம், மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நிர்வாக சீர்கேட்டின் காரணமாக சர்க்கரை ஆலை சரிவர இயங்காமல் உள்ளது. மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கரும்புக்கான தொகை வழங்கப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையால் இந்த ஆண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை முற்றிலும் இயக்கப்படாமல் முடங்கி கிடக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கடந்த 2 ஆண்டுகளாக கரும்புக்கான நிலுவை தொகையை வழங்காமல் காலதாமதம் செய்வதை கண்டித்து கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் காசிநாதன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குனர் பழனியம்மாள் மற்றும் மணல்மேடு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

2-வது நாளாக...

இதனால் விவசாயிகள் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே இயக்க வேண்டும். கரும்பு பயிரிடுவதற்கான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தனியாருக்கு துணைபோகும் சர்க்கரை ஆலை நிர்வாகிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.


Related Tags :
Next Story