தியாகராயநகர் பகுதியில் செல்போன், நகை பறிப்பில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி கைது
சென்னை தியாகராயநகர் பகுதியில் நகை மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை தியாகராயநகர் தர்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் கலாவதி (வயது 58). இவர் கடந்த மாதம் 11-ந் தேதி இரவு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கலாவதி கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்றுவிட்டனர்.
இதைப்போல கடந்த மாதம் 15-ந் தேதி இரவு வேலாயுதம் என்பவர் தியாகராயநகர் அருணாம்பாள் தெருவில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் அவரது செல்போனை பறித்துச்சென்றனர்.
இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தியாகராயநகர் பகுதியில் அடிக்கடி நகை, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. குறிப்பிட்ட 2 நபர்கள்தான் இதில் ஈடுபட்டது தெரியவந்தது.
அண்ணன்- தம்பி கைது
தியாகராயநகர் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவாகி இருந்த நகை, செல்போன் பறிப்பு கொள்ளையர்களின் உருவத்தை வைத்து துப்பு துலக்கி அவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில், துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் சுப்பிரமணி ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீசார், தொடர்ந்து சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட கெருகம்பாக்கத்தை சேர்ந்த இம்தியாஸ் அகமது (26), ஆசிப் அகமது (24) ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 35 செல்போன்களும் மற்றும் தங்க நகைகளும் மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story