அ.தி.மு.க., தி.மு.க. தவிர மற்ற கட்சிகளை ஏற்றுக்கொள்வோம்
அ.தி.மு.க., தி.மு.க. தவிர மற்ற கட்சிகளை ஏற்றுக்கொள்வோம் சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
சிதம்பரம்,
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் தவிர வேறு எந்த கட்சியும் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால், அவர்களை ஏற்றுக்கொள்வோம் என்று சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
பொதுக்கூட்டம்உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டத்தின் மூலம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடச்செய்ததற்காக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோருக்கு பாராட்டு விழா–வெற்றிவிழா பொதுக்கூட்டம் சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் நேற்று இரவு நடைபெற்றது. கடலூர் தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு பா.ம.க. மாநில துணைப்பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் செல்வ.மகேஷ், சுரேஷ், அன்புசோழன், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி., மாநில தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் குரு, சமூக நீதிப்பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
அப்போது டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–
மதுக்கடைகள் மூடப்பட்டனஉச்சநீதிமன்றம் வரை சென்று போராடி தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. மதுக்கடைகளால் இந்தியாவில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்கிறார்கள். பீகாரில் முதல்–அமைச்சர் நித்தீஷ்குமார் பூரண மதுவிலக்கை கொண்டுவந்துள்ளார். அவருக்கு பா.ம.க. சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். அந்த விழா விரைவில் கண்டிப்பாக நடத்தப்படும். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தமிழ்நாட்டை நாசமாக்கிவிட்டது.
பெண்களின் போராட்டம் வரவேற்கத்தக்கதுமோடி அறிவிக்கும் திட்டங்கள் எல்லாம் செயல்படாத திட்டம். மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத திட்டங்கள். 2023–ம் ஆண்டு தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறும் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார். ஆனால் அதற்கான அறிகுறிகளோ, மாற்றமோ தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் தனிநபர் வருமானம் 1½ லட்சம் ரூபாய் கூட இல்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் 3½ லட்சம் ரூபாயில் இருந்து 4½ லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது.
தமிழகத்தில் பெண்கள் தானாகவே ஒன்று திரண்டு மதுக்கடைகளை அடித்து நொறுக்கி, அதனை மூடச்செய்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்துவிட்ட தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளை நீங்கள் தூக்கி எறியுங்கள். மாற்றம் இருந்தால்தான் முன்னேற்றம் வரும். மாற்றத்தை நீங்கள் கொடுங்கள், முன்னேற்றத்தை அன்புமணி ராமதாஸ் தருவார்.
உயர்கல்வித்துறையில் ஊழல்தமிழகத்தில் உயர்கல்வித்துறையில் ஊழல் நடக்கிறது. ஊழலுக்கு 9 வழிகள் என்பார்கள். ஆனால் தற்போது நடைபெறும் ஊழலை பார்த்தால், அதற்கு எத்தனை வழிகள் என்பதே தெரியவில்லை. தமிழக சட்டசபையில் மறைந்த ஜெயலலிதாவின் படத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவரது படம் தேவைதானா?. தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் குடிநீருக்காக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்று நடத்தியும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி நடத்துகிறார்கள். இதில் மாற்றம் வேண்டும். இதற்காக தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் தவிர வேறு எந்த கட்சியும் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால், அவர்களை ஏற்றுக்கொள்வோம்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
டாக்டர் அன்புமணிராமதாஸ்முன்னதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:–
தமிழகத்தில் திராவிட கட்சிகள் மதுவை கொண்டு வந்து மக்களுக்கு துரோகம் செய்தனர். ஆனால் சமூகநீதி போராளி டாக்டர் ராமதாஸ் மட்டுமே மதுவை ஒழிக்க போராடி உச்சநீதிமன்றம் சென்று வாதாடி இந்தியா முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடைகளையும், தமிழகத்தில் 3,321 மதுக்கடைகளையும் மூடச்செய்துள்ளார். இனிவரும் காலங்களில் தமிழகத்தை நல்ல ஆட்சியாளர்கள் ஆள வாய்ப்பு கொடுங்கள். அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சீரமைக்க பல போராட்டங்களை பா.ம.க. நடத்தியது. தற்போதும் இந்த பல்கலைக்கழகம் சீர்கெட்டு கிடக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. எனவே அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சீர்படுத்தவில்லையென்றால், பா.ம.க. சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
போராட்டம்தமிழகத்தில் எண்ணெய் கிணறுகள் இருக்கக்கூடாது, அனைத்தையும் தூக்கியெறிய வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டக்கோரி எனது தலைமையில் பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்தில் இளைஞர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு தீய சக்திகளையும் ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டை காக்க மாற்றம் வேண்டும். அந்த மாற்றத்தை நான் கொடுப்பேன், தமிழக மக்கள் என்னோடு இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
கூட்டத்தில் மாநில சொத்து பாதுகாப்பு குழுத்தலைவர் கோவிந்தசாமி, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தன்ராஜ், மாநில ஒழுங்குநடவடிக்கைகுழு தேவதாசு, மாநில துணைத்தலைவர் சந்திரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய.சஞ்சீவி, பா.ம.க. மாநில மகளிர் அணி நிர்வாகிகள் சிலம்பு செல்வி, ஆலயமணி, திலகபிரியா, மாநில நிர்வாகிகள் முருகன், பழனிச்சாமி, மாவட்ட நிர்வாகிகள் செல்வபிரதீஸ், வீரமணி, கலியபெருமாள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.