வேடசந்தூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வேடசந்தூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுக்கடைவேடசந்தூரில் பழனி ரோடு, கரூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 4 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த 4 மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதையடுத்து இந்த மதுக்கடைகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்து திறக்கும் பணியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கரூர் ரோட்டில் செயல்பட்டு வந்த மதுக்கடை, கருக்காம்பட்டி அருகே அருணாசலம் நகரில் ஒரு தனியார் கட்டிடத்தில் திறக்கப்பட்டது. இந்த மதுக்கடை எதிரில் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் கோவில் உள்ளது. மேலும் கருக்காம்பட்டி காலனி உள்ளது.
சாலை மறியல்வேடசந்தூரில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் மூடப்பட்டதால் அந்த மதுக்கடையில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் மது வாங்கி குடித்து விட்டு அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த மதுக்கடையை மூட வேண்டும் என்று கருக்காம்பட்டி காலனியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்தநிலையில் மதுக்கடையை அகற்றக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று வேடசந்தூர்– கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பேச்சுவார்த்தைஇதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் பணியாளர்களிடம் தெரிவித்து மதுக்கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேடசந்தூர் தாசில்தார் தசாவதாரம் உத்தரவுப்படி மதுக்கடை மூடப்பட்டது. மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.