காவிரி ரோட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடை, வீடுகள் இடித்து அகற்றம்


காவிரி ரோட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடை, வீடுகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 8 Jun 2017 3:41 AM IST (Updated: 8 Jun 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 2 கடை–4 வீடுகள் இடித்து அகற்றம்

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 2 கடைகள் மற்றும் 4 வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டது.

ஆக்கிரமிப்பு

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் ஓம் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலின் முன் பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 680 சதுர அடி காலி இடம் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.

அதனால் இந்து அறநிலையத்துறை சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடு மற்றும் கடைகளை இடித்து அகற்ற உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கடந்த வாரம் சம்பந்தப்பட்ட வீடு மற்றும் கடைக்காரர்களிடம் காலி செய்யும்படி நோட்டீசு வழங்கப்பட்டது.

இடித்து அகற்றம்

இந்த நிலையில் ஓம் காளியம்மன் கோவில் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 4 வீடுகள் மற்றும் 2 கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று காலை இடித்து அகற்றப்பட்டது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் இந்து அறநிலையத்துறை ஆணையாளர் முருகையா, தாசில்தார் பழனிச்சாமி (கோவில் நிலங்கள்) ஆகியோர் இடித்து அகற்றும் பணியை பார்வையிட்டனர்.


Next Story