16 ஆண்டுகளுக்கு பிறகு பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்


16 ஆண்டுகளுக்கு பிறகு பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 8 Jun 2017 10:30 PM GMT (Updated: 8 Jun 2017 6:48 PM GMT)

16 ஆண்டுகளுக்கு பிறகு பூவனூர் சதுரங்கவல்லப நாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மன்னார்குடி,

நீடாமங்கலம் வட்டம் பூவனூர் கிராமத்தில் சதுரங்கவல்லபநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி ஆகிய 2 அம்மன்கள் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மைசூருக்கு அடுத்த படியாக தமிழகத்தில் இந்த கோவிலில் தான் தனி சன்னதியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கிறார். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவையொட்டி முன்னதாக கடந்த 5-ந் தேதி மாலை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 6.45 மணிக்கு யாகசாலையில் பூர்ணாகுதி, 6-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 8 மணிக்கு ராஜகோபுரம், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், 8.15 மணிக்கு சதுரங்கவல்லப நாதர், கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி, சாமுண்டீஸ்வரி அம்மன் விமானங்களுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது.

பஞ்சமூர்த்திகள் வீதி உலா

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுரம் இளைய ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மட காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமி கள், தஞ்சை கணபதி சுப்பிரமணியன் சாஸ்திரிகள், மானாமதுரை மகாபஞ்முக பிரத்யங்கிரா கோவில் சுவாமிஜி, மாதாஜி, கோவில் தக்கார் சுகுமார், ஆய்வாளர் ரமணி, செயல் அலுவலர் அரவிந்தன், பிரதோஷ கமிட்டி நிர்வாகி பூவனூர் தியாகராஜன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலை 6 மணிக்கு சுவாமி-அம்மன் பரிவார தெய்வங்களுக்கு மகாஅபிஷேகமும், இரவு 7,30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது.

Next Story