தாலுகா ஆஸ்பத்திரிகளில் அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை மந்திரி ரமேஷ்குமார் தகவல்


தாலுகா ஆஸ்பத்திரிகளில் அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை மந்திரி ரமேஷ்குமார் தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2017 1:52 AM IST (Updated: 9 Jun 2017 1:52 AM IST)
t-max-icont-min-icon

தாலுகா ஆஸ்பத்திரிகளில் அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று சட்டசபையில் மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.

பெங்களூரு,

தாலுகா ஆஸ்பத்திரிகளில் அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று சட்டசபையில் மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.

78 ஆம்புலன்ஸ் வாகனங்கள்

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தொடர்பாக பல்வேறு உறுப்பினர்கள் கேள்விகளை கேட்டனர். அதற்கு அந்த துறையின் மந்திரி ரமேஷ்குமார் பதிலளிக்கையில் கூறியதாவது:–

நடப்பு ஆண்டில் புதிதாக 78 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும். கர்நாடகத்தில் நெடுஞ்சாலைகளில் 15 கிலோ மீட்டருக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகன சேவையை வழங்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் ஆகும். குனிகல் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள 2 ஆம்புலன்சுகளும் பழுதாகியுள்ளன. அவற்றை பழுது நீக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த ஆஸ்பத்திரிக்கு ஒரு புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்படும்.

ரத்த சுத்திகரிப்பு மையங்கள்

ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்குவதற்கு மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி மலை பகுதிகளில் 20 ஆயிரம் மக்கள்தொகைக்கு ஒன்றும், சமதள பகுதியில் 30 ஆயிரம் மக்கள்தொகை பகுதிக்கு ஒன்றும் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வேண்டும். ஆனால் உறுப்பினர் உமேஷ் கத்தி, 11 ஆயிரத்து 648 மக்கள்தொகை கொண்ட பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடங்குமாறு கேட்கிறார்.

இது சாத்தியம் இல்லை. வேண்டுமானால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்து, அங்கு ஒரு துணை சுகாதார நிலையத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக 114 தாலுகா தலைநகரங்களில் ரத்த சுத்திகரிப்பு மையங்கள் அரசு–தனியார் பங்களிப்பில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது 20 மாவட்ட ஆஸ்பத்திரிகள், 3 முதன்மை ஆஸ்பத்திரிகள் 35 தாலுகா ஆஸ்பத்திரிகளில் ரத்த சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, அவை செயல்பட்டு வருகின்றன.

குறைந்த விலை மருந்தகங்கள்

தாலுகா ஆஸ்பத்திரிகளில் அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு குறைந்த விலை மருந்தகங்கள் தொடங்கப்படும். பல்வேறு வகையான நோய்க்கான பரிசோதனை ஆய்வு கூடங்களும் அமைக்கப்படுகின்றன. 3 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவும் தொடங்கப்படும். இன்னும் 1½ மாதத்தில் இந்த பணிகள் செய்து முடிக்கப்படும்.

அனைத்து மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளிலும் சி.டி. ஸ்கேன் கருவி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லாத வகையில் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் அரசு ஆஸ்பத்திரிகளில் செய்யப்படும்.

இவ்வாறு ரமேஷ்குமார் கூறினார்.


Next Story