பெங்களூரு வடக்கு–தெற்கு வழித்தடத்தில் பணிகள் நிறைவடைந்தது நாகச்சந்திரா–எலச்சனஹள்ளி இடையே மெட்ரோ ரெயில் சேவை


பெங்களூரு வடக்கு–தெற்கு வழித்தடத்தில் பணிகள் நிறைவடைந்தது நாகச்சந்திரா–எலச்சனஹள்ளி இடையே மெட்ரோ ரெயில் சேவை
x
தினத்தந்தி 9 Jun 2017 2:04 AM IST (Updated: 9 Jun 2017 2:04 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு வடக்கு–தெற்கு வழித்தடத்தில் பணி நிறைவடைந்ததை அடுத்து நாகச்சந்திரா–எலச்சனஹள்ளி இடையே வருகிற 17–ந் தேதி மெட்ரோ ரெயில் சேவையை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு,

பெங்களூரு வடக்கு–தெற்கு வழித்தடத்தில் பணி நிறைவடைந்ததை அடுத்து நாகச்சந்திரா–எலச்சனஹள்ளி இடையே வருகிற 17–ந் தேதி மெட்ரோ ரெயில் சேவையை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தொடங்கி வைக்கிறார்.

43 கிலோ மீட்டர் நீளத்திற்கு...

பெங்களூருவில் சுமார் 43 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் நகரின் கிழக்கு–மேற்கு, வடக்கு–தெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கிழக்கு–மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் 19 கிலோ மீட்டர் நீளத்திற்கு பையப்பனஹள்ளியில் இருந்து நாயண்டஹள்ளி வரைக்கும், 24 கிலோ மீட்டர் தூரத்திற்கு வடக்கு–தெற்கு பகுதிகளை இணைக்க நாகச்சந்திரா முதல் எலச்சனஹள்ளி வரைக்கும் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் கட்டமாக பையப்பனஹள்ளி–நாயண்டஹள்ளி பாதையில் கடந்த ஆண்டு முழுமையாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

பாதுகாப்பு சோதனைகளை...

இந்த நிலையில் நாகச்சந்திரா–எலச்சனஹள்ளி பாதையில் சுரங்க பாதை பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர் நேரில் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டார். இந்த சோதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது.

இதனால் நாகச்சந்திரா–எலச்சனஹள்ளி பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும் தேதி எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் இதுதொடர்பாக கர்நாடக சட்டசபை கூட்டத்தில் பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நேற்று தாமாக முன்வந்து அறிக்கையை தாக்கல் செய்து வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

17–ந்தேதி மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்

பெங்களூருவில் முதற்கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டது என்பதை இந்த சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். மத்திய அரசின் ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர், நாகச்சந்திரா–எலச்சனஹள்ளி பாதையில் ஆழமான பாதுகாப்பு சோதனை மேற்கொண்டார். இந்த ரெயில் பாதையில் ரெயிலை இயக்கலாம் என்று அவர் பிரமாண பத்திரம் வழங்கியுள்ளார்.

இதையடுத்து அந்த பாதையில் வருகிற 17–ந் தேதி மெட்ரோ ரெயில் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த சபைக்கு தெரிவிக்கிறேன். ஒட்டுமொத்தமாக முதற்கட்ட மெட்ரோ ரெயில் சேவையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கிவைக்கிறார். பொதுமக்களுக்காக 18–ந் தேதி முதல் முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக தொடங்கப்படுகிறது.

இவ்வாறு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.


Next Story