தமிழகத்தில் எந்த நேரமும் சட்டமன்ற தேர்தல் வரலாம் பா.ம.க. தலைவர் பேட்டி


தமிழகத்தில் எந்த நேரமும் சட்டமன்ற தேர்தல் வரலாம் பா.ம.க. தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 8 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-09T02:46:16+05:30)

தமிழகத்தில் எந்த நேரமும் சட்டமன்ற தேர்தல் வரலாம் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

திருச்சி,

தமிழகத்தில் 3 அணிகளாக செயல்படும் அ.தி.மு.க. நான்கு அல்லது ஐந்து அணியாக கூட மாறலாம். அந்த அளவிற்கு அந்த கட்சியில் பூசல்கள் உள்ளன. அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை தக்க வைப்பதற்காக நடத்தும் போட்டியை தவிர்த்து மக்களுக்கு ஏதாவது ஒரு நல்லது செய்யவேண்டும் என்ற சிந்தனையுடன் செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். திராவிட கட்சிகளுடன் பா.ம.க. கூட்டணி வைத்துக்கொள்ளாது என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

பாரதீய ஜனதா கட்சியுடன் பா.ம.க. கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு இப்போது பதில் அளிக்க முடியாது. இப்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் சட்டமன்ற தேர்தல் வரலாம். ஜனநாயகநாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பா.ம.க.வுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

பூரண மதுவிலக்கு

ஜூலை 1-ந்தேதி முதல் சரக்கு சேவை வரியை அமல்படுத்தினால் சிறு மற்றும் குறு தொழில்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். இந்த வரியானது பன்னாட்டு நிறுவனங்களுக்கே சாதகமாக அமையும். எனவே சரக்கு சேவை வரி விகிதத்தை மத்திய அரசு குறைக்கவேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும்.

நதிகள் தேசியமயம்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பாட திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை. ஐ.ஐ.டி. உள்ளிட்ட மத்திய அரசு நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் ஆந்திராவில் 11 சதவீதமும், பீகாரில் 10 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் 1.5 சதவீதமாகவே உள்ளது. எனவே மத்தியஅரசின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கவேண்டும். கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டும் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்பது வேதனையை தருகிறது. காவிரி நீர் பிரச்சினை உள்ளிட்ட ஆறுகள் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்க நதிகளை தேசியமயமாக்க வேண்டும். திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இரண்டாம் கட்ட பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

இதனை தொடர்ந்து திருச்சி மாநகர் மாவட்ட பா.ம.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஜி.கே. மணி கலந்து கொண்டு பேசினார். கட்சி வளர்ச்சி பணிகள், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத்தலைவர் கண்ணதாசன், மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராஜா, தலைவர் வினோத், தெற்கு மாவட்ட செயலாளர் திலீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story