பட்டாசு தொழிலுக்கு 28 சதவீத சரக்கு சேவை வரி விதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்


பட்டாசு தொழிலுக்கு 28 சதவீத சரக்கு சேவை வரி விதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்
x
தினத்தந்தி 8 Jun 2017 10:15 PM GMT (Updated: 8 Jun 2017 9:22 PM GMT)

பட்டாசு தொழிலுக்கு மத்திய அரசு 28 சதவீத சரக்கு சேவை வரி விதிக்க உத்தேசித்து இருப்பதால் இத்தொழிலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

விருதுநகர்,

மத்திய அரசு வருகிற ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த வரி விதிப்பு முறைப்படி ஒவ்வொரு பொருளுக்கும் குறிப்பிட்ட சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு முறைக்கு பல மாநில அரசுகள் ஒப்புதல் அளித்து விட்டாலும் சில மாநிலங்களில் இதற்கு முழு ஒப்புதல் தராத நிலை நீடிக்கிறது.

28 சதவீதம்

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு தரும் பட்டாசு தொழிலுக்கு 28 சதவீத சரக்கு சேவை வரி விதிக்க மத்திய அரசு உத்தேசித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலையில் மாநில அரசு மதிப்பு கூடுதல் வரியாக 14.5 சதவீதமும், மத்திய அரசு சுங்க வரியாக 12.5 சதவீதமும் வசூலித்து வருகிறது. இதற்கு பதிலாக மத்திய அரசு ஒட்டுமொத்தமாக 28 சதவீத சரக்கு சேவை வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாதிப்பு

தமிழகத்தில் மொத்தம் உள்ள 800-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் 3 சதவீத தொழிற்சாலைகள் மட்டுமே மத்திய அரசின் 12.5 சதவீத சுங்கவரியை செலுத்தி வருகிறது. மீதமுள்ள தொழிற்சாலைகள் சிறு தொழிலுக்கான சுங்கவரி விலக்கை பெற்று விடுவதால் மாநில அரசின் மதிப்பு கூடுதல் வரியை மட்டுமே செலுத்தி வருகிறது.

தற்போது சரக்கு சேவை வரி விதிப்பு என்பது அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும். இந்த நிலையில் 28 சதவீத வரி விதிப்பு பட்டாசு தொழிலை பெரும் அளவில் பாதிக்கும். ஏற்கனவே பட்டாசு தொழில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவிக்கும் நிலையில் அதிக வரி விதிப்பு என்பது இத்தொழிலை முற்றிலுமாக நலிந்துபோக செய்துவிடும்.

கோரிக்கை

எனவே மத்திய அரசு பட்டாசு தொழிலில் உள்ள நடைமுறை பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பட்டாசு உற்பத்திக்கு 5 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே சரக்கு சேவை வரி விதிக்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இப்பிரச்சினையில் மாநில அரசு தலையிட்டு லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் இத்தொழில் நலிந்துபோகாமல் இருக்க குறைந்த சதவீத சரக்கு சேவை வரியை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story