கடையம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் மதுக்கடையை மூடுமாறு பெண்கள் கதறி அழுததால் பரபரப்பு


கடையம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் மதுக்கடையை மூடுமாறு பெண்கள் கதறி அழுததால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Jun 2017 8:45 PM GMT (Updated: 2017-06-10T00:13:24+05:30)

கடையம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கடையம்,

கடையம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய போலீசாரிடம், எப்படியாவது மதுக்கடையை மூடுமாறு பெண்கள் கதறி அழுதனர். இதனால் அங்கு பரபரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் கடைகள்

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டன. அப்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக வேறு இடத்தில் மதுக்கடை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருவதால் ஆங்காங்கே மதுக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

மயிலப்பபுரம்

அப்படி பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டதால், ஆங்காங்கே உள்ள ஒரு சில கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது. இதனால் எந்த ஊரில் மதுக்கடை உள்ளதோ, அந்த கிராம மக்கள் குடிகாரர்களால் கடும் சிரமங்களை சந்திக்கிறார்கள். அப்படித்தான், நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள மயிலப்பபுரத்தில் உள்ள மதுக்கடை பகுதியில் வசிக்கும் மக்கள், குடிகாரர்களால் சிரமப்படுகிறார்கள்.

அதாவது மயிலப்பபுரத்தில் டாஸ்மாக் கடையானது சின்னகுமார்பட்டி, மயிலப்பபுரம், கரிசலூர், ராஜாகுடியிருப்பு ஆகிய கிராமங்கள் சந்திக்கும் இடத்தில் உள்ளது. எனவே இந்த 4 கிராம மக்களும் அந்த டாஸ்மாக் கடையை கடந்துதான் செல்ல வேண்டும். எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக இருப்பதால், குடிகாரர்கள் குடித்து விட்டு அலங்கோலமாக கிடப்பதும், அசிங்கமான வார்த்தைகளை பேசுவதும் அந்த வழியாக செல்லும் பெண்கள், மாணவ–மாணவிகளை முகம் சுளிக்க வைக்கிறது.

போராட்டம்

இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அப்படி இருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மயிலப்பபுரம், சின்னகுமார்பட்டி, வெங்கடாம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மதுக்கடையை மூடக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்துக்கு அரியப்பபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜான் ஜெயபால், திருமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கணேசன், தெற்கு மடத்தூர் முன்னாள் தலைவர் அருள்ராஜ், வட்டார காங்கிரஸ் தலைவர் மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள் கூறுகையில், நாங்கள் அகிம்சை வழியில் போராட்டம் நடத்துகிறோம். இன்னும் 15 நாட்களுக்குள் இந்த மதுக்கடையை மூட வேண்டும் என்றனர். அதனை கேட்ட போலீசார், உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன்பிறகு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

துண்டு பிரசுரம் வினியோகம்

போராட்டம் முடிந்த பிறகு கிராம மக்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் அந்த பகுதி கிராமங்களில் வினியோகம் செய்யப்பட்டது.

தகவல் அறிந்த வெங்கடாம்பட்டி வருவாய் ஆய்வாளர் அனீஸ் பாத்திமா, கிராம நிர்வாக அலுவலர் அன்னலட்சுமி ஆகியோர் விரைந்து வந்து பிரச்சினைக்குரிய டாஸ்மாக் கடை பகுதியை பார்வையிட்டு சென்றனர். கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்து பிரச்சினைக்குரிய டாஸ்மாக் கடை நேற்று மதியத்துக்கு பிறகு திறக்கப்பட்டது.

--–

போலீசாரிடம், கதறி அழுத பெண்கள் –

போராட்டத்தின்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த டாஸ்மாக் கடையால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உழைக்கும் பணத்தை தினமும் குடித்தே அழித்து விடுகிறார்கள். குடித்து விட்டு வந்து தினமும் வீட்டில் சண்டை போடுகிறார்கள். எங்களது பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை. இந்த மதுக்கடையால் எங்களது வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் தவிக்கிறோம். எனவே எங்களது வாழ்க்கையை சீரழிக்கும் இந்த டாஸ்மாக் கடையை எப்படியாவது மூடி விடுங்கள் என்று கூறி பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த காட்சி பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உள்பட அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.


Next Story