பசுவதை தடுப்பு குறித்த புதிய விதிகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்


பசுவதை தடுப்பு குறித்த புதிய விதிகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 9 Jun 2017 9:00 PM GMT (Updated: 9 Jun 2017 7:14 PM GMT)

மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு,

பசுவதை தடுப்பு குறித்த புதிய விதிகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதல்–மந்திரி சித்தராமையா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–

அரசியல் சாசனத்திற்கு எதிரானது

மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, பசுவதை தடுப்பு(கால்நடை சந்தை கட்டுப்பாட்டு விதிகள்) புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ள புதிய விதிகள், அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இது இந்த சமுதாயம் மற்றும் பொருளாதாரம் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். கர்நாடகத்தில் ஏற்கனவே உள்ள சட்டம், பசுக்களின் வணிகத்திற்கு அனுமதி வழங்குகிறது.

ஆனால் மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய அரசாணை விவசாயிகள் இடையே கால்நடைகளை விற்பனை செய்து கொள்வது மிக மோசமாக பாதிக்கும். பசு மாடுகளை விற்க முடிவு செய்யும் விவசாயிகள் அதை விற்பனை செய்ய, உரிய ஆவணங்களை காட்ட வேண்டும் எனறு புதிய விதிமுறை சொல்கிறது.

அனுமதி மறுக்கிறது

இத்தகைய ஆவணங்களை விவசாயிகளால் வழங்க முடியாது. இதனால் அவர்கள் வளர்க்கும் மாடுகளை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வயதான மாடுகளை விவசாயிகளால் வளர்க்க இயலாது. புதிய விதிமுறைகளால் அதை விற்கவும் முடியாது. இதனால் விவசாயிகள் நிதி நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் அமலில் உள்ள பசுவதை தடை சட்டம், 12(ஆண்டுகள்) வயதுக்கு மேற்பட்ட மாடுகளை மட்டுமே வெட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

ஆனால் மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய அரசாணை, வயது வித்தியாசம் இன்றி மாடுகளை வெட்ட அனுமதி மறுக்கிறது. மாநிலத்திற்கு வெளியே விற்பனை செய்யவும் புதிய விதிமுறை தடுக்கிறது. அரசியல் சாசனப்படி இது மாநில அரசின் விவகாரம் ஆகும். ஏழை மற்றும் சாமானிய மக்களுக்கு இறைச்சி தான் முக்கியமான புரதச்சத்து உணவு ஆகும்.

வேலை வாய்ப்பை இழப்பார்கள்

மாட்டு இறைச்சியை சிறுபான்மை, ஆதிதிராவிட மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் உண்கிறார்கள். இதை தடை செய்யும் மத்திய அரசின் விதிமுறைகள் சரியல்ல. இது தேவையற்றது. நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பசுக்களின் தோல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த தடை அந்த தொழில் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் இருந்து மாட்டு இறைச்சி அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழப்பார்கள். மத்திய அரசு புதிய அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு, மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் இந்த அரசாணை பிறப்பித்து இருப்பதன் மூலம், கூட்டாட்சி தத்துவத்தின் அடி வேர்களை பாதிப்படைய செய்துள்ளது. இந்த சமுதாயம் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story