பெங்களூரு–திருப்பதி ஆன்மிக சுற்றுலா: ஜெயநகரில் இருந்து புதிய சொகுசு பஸ் சேவை கர்நாடக அரசு பஸ் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
பெங்களூரு–திருப்பதி ஆன்மிக சுற்றுலாவுக்கு ஜெயநகரில் இருந்து புதிய சொகுசு பஸ் சேவை தொடங்க உள்ளதாக கர்நாடக அரசு பஸ் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு–திருப்பதி ஆன்மிக சுற்றுலாவுக்கு ஜெயநகரில் இருந்து புதிய சொகுசு பஸ் சேவை தொடங்க உள்ளதாக கர்நாடக அரசு பஸ் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
ஆன்மிக சுற்றுலாபெங்களூரு மைசூரு ரோடு பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல கடந்த மாதம்(மே) 12–ந் தேதி கர்நாடக அரசு பஸ் போக்குவரத்து கழகம்(கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் சொகுசு பஸ் சேவை தொடங்கியது.
இந்த பஸ் விஜயநகர் டி.டி.எம்.சி., மாகடி ரோடு டோல்கேட், நவரங், மல்லேசுவரம், கெம்பேகவுடா பஸ் நிலையம், ஐ.டி.ஐ. கேட், கே.ஆர்.புரம் வழியாக திருப்பதிக்கு சென்று வருகிறது. இந்த பஸ் சேவைக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
புதிய பஸ் சேவைஇதன் காரணமாக, பெங்களூரு ஜெயநகர் 4–வது பிளாக்கில் இருந்து திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல வருகிற 15–ந் தேதி முதல் புதிய சொகுசு பஸ் சேவையை கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் தொடங்க உள்ளது. இந்த புதிய பஸ் சேவை தினமும் இயங்க உள்ளது.
பெங்களூரு ஜெயநகர் 4–வது பிளாக்கில் இருந்து தினமும் இரவு 8.35 மணிக்கு புறப்படும் சொகுசு பஸ் நாகசந்திரா, என்.ஆர்.காலனி, சாந்தி நகர் பஸ் நிலையம், டொம்லூர் டி.டி.எம்.சி, மாரத்தஹள்ளி, ஒயிட்பீல்டு, காடுகோடி போலீஸ் நிலையம் வழியாக திருப்பதியை நோக்கி செல்கிறது.
கட்டண விவரம்இந்த ஆன்மிக சுற்றுலாவுக்கு ஞாயிறு முதல் வியாழக்கிழமை வரை செல்லும் பெரியவர் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் எனவும், 6 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட ஒருவருக்கு ரூ.1,700 எனவும் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெரியவர் ஒருவருக்கு ரூ.2 ஆயிரத்து 500 எனவும், சிறியவர்களுக்கு ரூ.2 ஆயிரம் எனவும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
சொகுசு பஸ்சில் ஆன்மிக சுற்றுலா செல்பவர்களுக்கு மறுநாள் காலை மற்றும் மாலை உணவுகள் வழங்கப்படும். அத்துடன் பயணிகள் பத்மாவதி கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவதுடன், திருப்பதி வெங்கடாஜலபதியை விரைவு தரிசனமும் செய்யலாம். இதற்காக பயணிகள் திருப்பதியில் இருந்து திருமலாவிற்கு ஆந்திர அரசு பஸ்சில் அழைத்து செல்லப்படுவார்கள்.
ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பும் பொதுமக்கள் தங்களுக்கான டிக்கெட்டுகளை ஒரு மாதத்திற்கு முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுண்ட்டர்கள் மூலமாகவும், ஆன்–லைன் வழியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் கே.எஸ்.ஆர்.டி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.