கல்லூரி மாணவருக்கு வெடிக்கும் நிலையில் ரத்தக்குழாய்
கல்லூரி மாணவருக்கு வெடிக்கும் நிலையில் இருந்த ரத்தக்குழாய், வால்வு ஆகியவற்றை வடமலையான் மருத்துவமனை டாக்டர்கள் அதிநவீன அறுவைச்சிகிச்சை மூலம் குணப்படுத்தினர்.
மதுரை,
கல்லூரி மாணவருக்கு வெடிக்கும் நிலையில் இருந்த ரத்தக்குழாய், வால்வு ஆகியவற்றை வடமலையான் மருத்துவமனை டாக்டர்கள் அதிநவீன அறுவைச்சிகிச்சை மூலம் குணப்படுத்தினர்.
இதுதொடர்பாக மதுரை வடமலையான் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் பாபு, மயக்கவியல் மருத்துவ நிபுணர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:– மேலூரைச் சேர்ந்தவர் குணசேகரன்(வயது 18). கல்லூரி மாணவரான இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவும், மூச்சுத்திணறலும் இருந்து வந்துள்ளது. மிகவும் சோர்வுடன் இருந்து வந்த குணசேகரன் அன்றாட வேலைகளை செய்யமுடியாமல் அவதியடைந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் மதுரை வடமலையான் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இருதய சிகிச்சைப்பிரிவு மூத்த மருத்துவர் சீனிவாசன், அவரை பரிசோதித்தபோது, பெருந்தமனியின் தொடக்கப்பகுதி மிகவும் கடுமையாக வீக்கமடைந்து அபாய நிலையில் இருந்தது. மேலும் பெருந்தமனி பிளவுபடும் அபாயத்துடனும், பெருந்தமனி வால்வு பகுதியில் கடும் ரத்தக்கசிவும் ஏற்பட்டிருந்தது. அவரது இருதயத்தின் இடது பகுதி இயல்பு அளவை விட விரிவடைந்திருந்தது. இதனால் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தைக்கொண்டு செல்லும் குழாய்கள் சேதமடைந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாய நிலையும் இருந்தது.
முன்னேற்றம்இதனை தொடர்ந்து குணசேகரனுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 8 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த அறுவை சிகிச்சையில் அவருக்கு இருதயம் மற்றும் நுரையீரலின் பணியை மேற்கொள்ளும் ஹார்ட் லங் கருவி மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பெருந்தமனியின் சேதமடைந்த பகுதியும், பெருந்தமனியின் வால்வு பகுதியும் மாற்றப்பட்டது. இவற்றுக்குப் பதிலாக செயற்கை ரத்தக்குழாய் வால்வு பொருத்தப்பட்டது. இதை தொடர்ந்து உடலுள்ள அனைத்து முக்கிய உறுப்புகளுக்கும் ரத்தம் செல்வதற்கு உரிய ஏற்பாடுகளும், ரத்த இழப்பை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டன. அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணசேகரன் அபாயக்கட்டத்தை கடந்து நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.