பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி மதுவின் தீமைகளை விளக்கும் போராட்டம்
பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி, மதுவின் தீமைகளை விளக்கும் வகையில் நேற்று போராட்டம் நடத்தினர்.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி, மதுவின் தீமைகளை விளக்கும் வகையில் நேற்று போராட்டம் நடத்தினர்.
தொடர் போராட்டம்நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜனவரி மற்றும் மே மாதம் நடந்த கிராம சபை கூட்டத்திலும் இதுதொடர்பாக பொதுமக்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் கடை மூடப்படாததால் 1–ந் தேதி முதல் டாஸ்மாக் கடை அருகில் பொதுமக்கள் பந்தல் அமைத்தும், சமையல் செய்து சாப்பிட்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மதுவின் தீமைகளை விளக்கினர்இந்த போராட்டம் நேற்று 10–வது நாளாக நீடித்தது. மதுவினால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வகையில் நேற்றைய போராட்டம் நடந்தது. போராட்ட பந்தலில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகளை போராட்டக்காரர்கள் எடுத்துரைத்தனர். பெண்களும் மது குடிக்க ஆரம்பித்தால் நிலைமை என்னவாகும்? என்பது குறித்து விளக்கினர். மேலும் பெண்கள் மது குடிப்பது போல் நடித்தும் காட்டினர். அவர்களும் குடிக்க ஆரம்பித்தால் குடும்பம் எவ்வாறு சீரழியும் என்பதையும், மதுவினால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துக் கூறினர்.