சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி திண்டிவனத்தில் பொது மக்கள் சாலை மறியல்


சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி திண்டிவனத்தில் பொது மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Jun 2017 2:45 AM IST (Updated: 11 Jun 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி பொது மக்கள் சாலை மறியல்

திண்டிவனம்,

திண்டிவனத்தில் சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

திண்டிவனம் தில்லையாடி வள்ளியம்மை நகரில் 200–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தில்லையாடி வள்ளியம்மை நகர் பகுதியை சேர்ந்த மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து புகார் அளித்த பின்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று திண்டிவனத்தில் உள்ள சென்னை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், சப்–இன்ஸ்பெக்டர்கள் தனஞ்ஜெயன், மனோகரன், நகராட்சி மேலாளர் கிருஷ்ணராஜன், கிராம நிர்வாக அலுவலர் சடகோபன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொது மக்கள், கடந்த சில நாட்களாக எங்கள் பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காலிகுடங்களுடன் அருகில் உள்ள நகர் பகுதிகளுக்கு நாங்கள் அலைந்து திரிய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க எங்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

42 பேர் மீது வழக்குப்பதிவு

அதை கேட்ட அதிகாரிகள், தில்லையாடி வள்ளியம்மை நகர் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக கூறி தில்லையாடி வள்ளியம்மை நகரை சேர்ந்த குகன், சங்கர், தீபன் உள்பட 42 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story