போலீஸ் அதிகாரிகள் நினைத்தால் ரவுடிகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கலாம் முதல்–மந்திரி சித்தராமையா பேச்சு
போலீஸ் அதிகாரிகள் நினைத்தால் ரவுடிகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கலாம் என முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
போலீஸ் அதிகாரிகள் நினைத்தால் ரவுடிகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கலாம் என முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
நவீன கட்டுப்பாட்டு அறைபெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை உள்ளது. 100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம். 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் இந்த கட்டுப்பாட்டு அறை நவீன மயமாக்கப்பட்டு உள்ளது. 100 தொலைபேசி இணைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
கட்டுப்பாட்டு அறைகளில் உள்ள தொலைபேசிகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் சேவையான ‘டயல் 100‘ என்ற பெயர் ‘நம்ம 100‘ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சித்தராமையா திறந்து வைத்தார்இந்த நவீன கட்டுப்பாட்டு அறையை நேற்று முதல்–மந்திரி சித்தராமையா திறந்து வைத்தார். இதில் போலீஸ் துறை மந்திரி பரமேஸ்வர், நகர வளர்ச்சித்துறை மந்திரி ரோஷன் பெய்க், போலீஸ் டி.ஜி.பி. ஆர்.கே.தத்தா, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் நவீன கட்டுப்பாட்டு அறையை சித்தராமையா பார்வையிட்டார்.
இந்த வேளையில், கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்க வந்த ஒரு தொலைபேசி அழைப்பை சித்தராமையா ஏற்று பேசி புகாரை பெற்றார். அதனைத்தொடர்ந்து போலீசார் மத்தியில் சித்தராமையா பேசும்போது கூறியதாவது:–
போலீஸ்காரர்களின் கடமைகுற்றங்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது சாத்தியமில்லை. ஆனால், ரவுடிகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும். போலீஸ் அதிகாரிகள் நினைத்தால் இந்த பணியை சிறப்பாக செய்ய முடியும். இதற்கு ஒன்றும் பெரிய படை தேவையில்லை. பெங்களூரு மாநகரம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலகளவில் முன்னணியில் உள்ளது. உலகளவில் வேகமாக வளரும் நகரமாக பெங்களூரு உள்ளது.
இதனால், நகரில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வேண்டியது அவசியம். மோட்டார் சைக்கிள், வெள்ளை நிற கார் மற்றும் இளஞ்சிவப்பு நிற கார் என ரோந்து வாகனங்களின் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. சமுதாயத்தில் அமைதியை சீர்குலைப்பவர்கள், அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் வசிக்கும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை கொடுக்க வேண்டியது போலீசாரின் கடமை.
நவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம்பெங்களூருவில் 1.10 கோடி மக்கள் வசிக்கிறார்கள். தினமும் 30 லட்சம் முதல் 40 லட்சம் பேர் பெங்களூரு வந்து செல்கிறார்கள். சட்டத்தை கையில் எடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய பாடத்தை கற்பிக்க வேண்டும். அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குவது நமது கடமை.
போலீஸ் துறையில் நவீன தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு எந்த நவீன உபகரணங்கள் வந்தாலும் அதன் பயனை மக்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பதை நாம் செய்ய வேண்டும். ‘நம்ம 100‘ பாதுகாப்பு சேவை மாவட்ட தலைநகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் மந்திரிபோலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேசும்போது கூறுகையில், “நான் போலீஸ் அதிகாரிகளுடன் லண்டனுக்கு சென்றிருந்தபோது அங்குள்ள கட்டுப்பாட்டு மையங்களில் 4 வினாடிகளில் புகார்கள் ஏற்கப்பட்டது. 12 நிமிடங்களில் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நமது நகரங்களில் இத்தகைய வசதி வரவேண்டும் என்று நான் கருதினேன். அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறேன். பெங்களூருவை பாதுகாப்பு நகரமாக மாற்ற வேண்டி ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருகிறோம். போலீசார் மக்களுடன் நண்பர்களாக பழக வேண்டும்“ என்றார்.
இந்த விழாவில், பெங்களூரு மாநகர மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் மாலினி கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நிம்பால்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
‘நம்ம 100‘ சேவை மூலம்
தாமதம் இன்றி பொதுமக்களுக்கு உதவி கிடைக்கும்போலீஸ் கமிஷனர் பேட்டி
‘நம்ம 100‘ சேவை மூலம் தாமதம் இன்றி பொதுமக்களுக்கு உதவி கிடைக்கும் என்று போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட் தெரிவித்தார்.
இதுபற்றி மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
தாமதம் இன்றி பொதுமக்களுக்கு உதவி‘டயல் 100‘ சேவை திட்டத்தின் மூலம் சராசரியாக நாள் ஒன்றுக்கு கட்டுப்பாட்டு அறைக்கு 1,680 தொலைபேசி அழைப்புகள் வந்தன. ‘நம்ம 100‘ சேவை திட்டத்தின் மூலம் கட்டுப்பாட்டுக்கு அறைக்கு தினமும் 8,000 தொலைபேசி அழைப்புகள் வரை வரலாம். இதனால், தாமதம் இன்றி பொதுமக்களுக்கு போலீசாரின் உதவி கிடைக்கும்.
நவீன மயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை மூலம் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை 6 முதல் 15 வினாடிகளில் கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் எடுத்து பதில் கூற தொடங்குவர். இந்த அழைப்பின் தொடர்ச்சியாக அவசர உதவி தேவைப்படும் இடத்துக்கு 15 நிமிடங்களில் ரோந்து வாகனத்தில் போலீசார் செல்வார்கள். முன்னதாக, பொதுமக்கள் உதவி கோரும்போதே அவர்கள் இருக்கும் இடம் பற்றியும், அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகே செல்லும் ரோந்து வாகனத்தின் விவரங்களும் கட்டுப்பாட்டு அறை ஊழியருக்கு தெரியவரும்.
செல்போன் செயலி‘நம்ம 100‘ சேவையின் மூலம் பொதுமக்கள் தங்களுக்கான அவசர உதவிகளை செல்போனில் 100 என்ற எண்ணுக்கு போன் செய்து பெறலாம். இந்த சேவையை ‘சுரக்ஷா‘ மற்றும் ‘நம்ம 100‘ ஆகிய பெங்களூரு மாநகர போலீசாரின் செல்போன் செயலியின் வழியாகவும் அவசர உதவியை பொதுமக்கள் பெற்று கொள்ளலாம்.
செல்போனில் 100–யை டயல் செய்தபின் வாடிக்கையாளருக்கு போலீஸ் உதவி தேவைப்பட்டால் செல்போன் பொத்தான் 1–யும், போக்குவரத்து போலீசாரின் உதவியை பெற விரும்பினால் பொத்தான் 2–யும், போலீஸ் நிலைய அதிகாரிகளை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்குவது மற்றும் பிற விவரங்கள் தொடர்பான உதவி தேவைப்பட்டால் பொத்தான் 3–யும் அழுத்தி பொதுமக்கள் தங்களுக்கான உதவிகளை உடனடியாக பெறும் வாய்ப்பு இந்த சேவையில் உள்ளது.
இவ்வாறு பிரவீன் சூட் கூறினார்.