டி.டி.வி.தினகரனை கண்டித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையினர் ஆர்ப்பாட்டம்
டி.டி.வி.தினகரனை கண்டித்து எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவையினர் ஆர்ப்பாட்டம் 30 பேர் கைது
உடுமலை,
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபாவை அ.தி.மு.க.துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தரப்பில் இருந்து தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதை கண்டித்தும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் சார்பில் உடுமலை மத்திய பஸ்நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பேரவையின் புறநகர் மாவட்ட செயலாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் குரல்குட்டை கே.பி.செல்வராஜ், கொங்கு செல்வராஜ், சின்னசாமி, மஜீத், அருணாசலம், மகேந்திரன், ஆறுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, டி.டி.வி.தினகரனின் உருவ படத்தை எரிக்க முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அதை தடுத்துவிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசாரிடம் முன்கூட்டியே அனுமதிவாங்கவில்லை. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தாராபுரம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.