பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் செயற்குழுவில் தீர்மானம்
பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சையில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் முகமதுஉஸ்மான் செரீப், துணை அமைப்பு செயலாளர்கள் ராஜேந்திரன், ஜெயராமன், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் ராஜமாணிக்கம் வரவேற்றார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் பக்கிரிசாமி, மாநில துணைத் தலைவர் பத்மநாபன், மாவட்ட பொருளாளர் ஜார்ஜ்நெல்சன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், மத்திய காவல்துறையினருக்கு வழங்கப்படும் அடிப்படை சம்பளத்தை மாநில காவல்துறையினருக்கும் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற காவலர்களுக்கு 3 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அடிப்படை ஓய்வூதியத்தில் 50 சதவீத அகவிலைப்படியை இணைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பதவி உயர்வுஓய்வூதியம் பெறுபவர்கள் இறந்தால் அவர் வாங்கிய ஓய்வூதியத்தில் 50 சதவீதத்தை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1½ லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். காவல்துறையில் ஒரு பதவிக்கு ஒரு பென்சன் திட்டம் கொண்டு வர வேண்டும். ஓய்வூதியதாரர்கள் எந்த மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றாலும் அதற்கான முழு தொகையை வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட வேண்டும்.
அனைத்து காவலர்களுக்கும் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் முடித்த தேதியில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பதவி உயர்வும், பணப்பலனும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மக்கள் தொடர்பு செயலாளர் சந்தானகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ராதா, மாவட்ட செயலாளர்கள் வைரம், ராஜகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அருளானந்து தொகுத்து வழங்கினார்.