ரூ.16½ கோடியில் ஒருங்கிணைந்த புதிய கோர்ட்டு கட்டிடம் நீதிபதி பார்வையிட்டார்


ரூ.16½ கோடியில் ஒருங்கிணைந்த புதிய கோர்ட்டு கட்டிடம் நீதிபதி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 11 Jun 2017 4:30 AM IST (Updated: 11 Jun 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ரூ.16½ கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய கோர்ட்டு கட்டிடத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பார்வையிட்டார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கோர்ட்டுகளின் பொறுப்பு நீதிபதியான சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நேற்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவிலில் உள்ள கோர்ட்டுக்கு வந்த அவரை குமரி மாவட்ட செசன்சு நீதிபதி சதிகுமார், மக்கள் நீதிமன்ற நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம், தலைமை குற்றவியல் நீதிபதி முருகானந்தம் மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து நாகர்கோவிலில் ரூ.16½ கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டிடத்தை ஐகோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல் சங்க கட்டிடத்தில் நடந்த கூட்டத்துக்கு வக்கீல் சங்க தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் வக்கீல் மரிய ஸ்டீபன் உள்ளிட்ட நிர்வாகிகள், மூத்த வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் பேசும்போது கூறியதாவது:-

விரைவில் திறப்பு விழா

நான் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், நாஞ்சில் நாட்டின் மீது எனக்கு எப்போதும் பற்று உண்டு. தமிழில் அழிந்துபோன பல வார்த்தைகளை இன்னும் இந்த மாவட்ட மக்கள் பயன்படுத்தி வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பல திறமையான வக்கீல்கள் இந்த மாவட்டத்தில் உருவாகி இருக்கிறார்கள்.

நாகர்கோவிலில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய கோர்ட்டு கட்டிடம் விரைவில் திறக்கப்பட உள்ளது. ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் பங்கேற்கும் இந்த விழாவை நாம் அனைவரும் ஒற்றுமையோடு சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு ஐகோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் பேசினார்.

ஆலோசனை

பின்னர் குமரி மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் நாகர்கோவில் கோணத்தில் கட்டப்பட்டு வரும் நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்டிட பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Related Tags :
Next Story