தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் விவசாயிகளுக்கு நல்லது நடக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் விவசாயிகளுக்கு நல்லது நடக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 11 Jun 2017 11:00 PM GMT (Updated: 11 Jun 2017 9:11 PM GMT)

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் விவசாயிகளுக்கு நல்லது நடக்கும் என்று திருச்சியில் நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருச்சி,

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் நேற்று இரவு திருச்சி உழவர் சந்தை அருகே விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு நடந்தது. இதற்கு தமிழக பா.ஜ.க. விவசாய அணி தலைவர் பொன்.விஜயராகவன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் அஜய் பிரபாகர்மூப்பனார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி ஏழை, எளிய மக்கள், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். கடந்த கால காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறதா? கடந்த 2011-12-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.24 ஆயிரத்து 256 கோடி. ஆனால் செலவு செய்தது ரூ.23 ஆயிரத்து 290 கோடி தான்.

2013-14-ம் ஆண்டு விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டது ரூ.30 ஆயிரத்து 224 கோடி. செலவு செய்யப்பட்டது ரூ.25 ஆயிரத்து 896 கோடி. காங்கிரஸ் அரசு விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றியது.

மோடி அரசு

ஆனால், 2016-17-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி விவசாயிகளுக்கு ரூ.45 ஆயிரத்து 35 கோடி ஒதுக்கினார். இது போதாது என்று மேலும் ரூ.12 ஆயிரத்து 468 கோடி என மொத்தம் ரூ.57 ஆயிரத்து 503 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மரணம் அடைந்த விவசாயிகளின் குடும்பத் தினரை சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் போய் பார்க்கவில்லை. தமிழக விவசாயிகளின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் தம்பிதுரை. நான் (பொன்.ராதாகிருஷ்ணன்) 6 விவசாயிகளின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினேன். விவசாயிகளுக்கு மத்திய அரசு கொண்டு வந்த காப்பீடு திட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்தி இருந்தால், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்.

காவிரியில் தண்ணீர் வராததற்கு யார் காரணம். கர்நாடகாவில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்த போது, காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் தீர்மானம் போட்டோம். எப்போது தேர்தல் வந்தாலும் கர்நாடகாவில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரும். அதேபோல தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் விவசாயிகளுக்கு நல்லது நடக்கும். அடுத்த பொங்கலில் பாரதீய ஜனதா ஆட்சியை தமிழகத்தில் பார்க்கத்தான் போகிறீர்கள். தமிழக மக்கள் மனதில் 3 எழுத்து (எம்.ஜி.ஆர்.) நாயகனுக்கு பதிலாக 2 எழுத்து நாயகன்(மோடி) என்ற நிலை உருவாகப்போகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நெடுவாசல் பிரச்சினை

கூட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், மத்திய பிரதேசத்தில் தற்போது நடந்து உள்ள வன்முறையை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தூண்டி விட்டு உள்ளனர். விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆளும் கட்சியை ஏன் மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்கவில்லை. டெல்லியில் போராடிய விவசாயிகளை 5 மத்திய மந்திரிகள் நேரில் பார்த்து பேசினர். தமிழக அரசு செய்ய வேண்டியதை, மத்திய அரசு செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா?. நெடுவாசல் பிரச்சினைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதற்கு தயாராக இருக்கிறோம் என்றார்.

நதிகள் இணைப்பு

கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு 3 ஆண்டு காலம் மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை என்று கூறுகிறார். பாரதீய ஜனதா கூட்டங்களில் முதல் வரிசையில் இருக்கை போடுகிறோம். அதில் வந்து அமர்ந்து எங்கள் பேச்சை கேட்டுவிட்டு குற்றம் சொல்லுங்கள். இதையேதான் திருநாவுக்கரசருக்கும் சொல்லி கொள்கிறேன். மத்திய பிரதேசத்தை பற்றி பேசும் ராகுல்காந்தி கர்நாடகத்திற்கு போய் பார்க்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்று ராகுலை வைத்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் பேசுகிறார். நதிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்ததே ராகுல்காந்திதான்.

விவசாயிகள் கூட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சியை அழைக்க மாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நீங்கள் கூப்பிட்டாலும் நாங்கள் வரமாட்டோம். நதிகள் இணைப்புக்கு ஆரம்ப புள்ளி வைத்ததே வாஜ்பாய்தான். தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா துணை இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழ்நிலையை கொண்டு வருவோம் என்றார்.

கூட்டத்தில் பா.ஜ.க.நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரிகள் திருச்சியில் இருந்து விமானம் மூலம் இரவு சென்னை புறப்பட்டு சென்றனர்.


Next Story