2 டாஸ்மாக் கடைகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு போராட்ட அறிவிப்பால் போலீஸ் பாதுகாப்பு


2 டாஸ்மாக் கடைகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு போராட்ட அறிவிப்பால் போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 12 Jun 2017 2:41 AM IST (Updated: 12 Jun 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

பாலம்மாள்புரத்தில் 2 டாஸ்மாக் கடைகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கரூர்,

கரூர் வெங்கமேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாலம்மாள்புரத்தில் சுடுகாடு அருகே ஒரு டாஸ்மாக் கடையும், அதில் இருந்து சற்று தொலைவில் மற்றொரு டாஸ்மாக் கடையும் என 2 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடையை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மதுபிரியர்களால் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுவதாகவும் கூறியிருந்தனர். இந்த நிலையில் நேற்று பகல் 12 மணி அளவில் 2 டாஸ்மாக் கடைகளும் வழக்கம் போல திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தன.

போராட்டம் நடத்தப்போவதாக...

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், 2 டாஸ்மாக் கடைகளுக்கும் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் கடையை மூடுமாறும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என கூறிவிட்டு சென்றனர். மேலும் இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கடையை மூடிவிட்டு வெங்கமேடு போலீஸ் நிலையம் சென்று தகவலை கூறினர். இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட 2 கடைகளுக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த முக்கிய பிரமுகர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடைந்த பின் போராட்டம் எதுவும் நடத்தாமல் கலைந்து சென்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதைத்தொடர்ந்து 2 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. மதுபானங்கள் விற்பனை வழக்கம் போல நடந்தது. போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்ததால் 2 டாஸ்மாக் கடைகள் முன்பு நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story