சிவகங்கை அருகே கார் கவிழ்ந்து விபத்து; பால்வள துறை அதிகாரி பலி


சிவகங்கை அருகே கார் கவிழ்ந்து விபத்து; பால்வள துறை அதிகாரி பலி
x
தினத்தந்தி 12 Jun 2017 3:45 AM IST (Updated: 12 Jun 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மதுரை பால்வள துறை அதிகாரி இறந்துபோனார்.

சிவகங்கை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 43). இவர் மதுரை பால்வள துறையில் கூட்டுறவு துணைப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று சிவகங்கையில் நடைபெற்ற கூட்டுறவு துறையில் பணிபுரியும் ஒருவரது இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். திருமணம் முடிந்த பின்னர், திருமணத்திற்கு வந்திருந்த ராமநாதபுரம் பால்வள துறையில் மேலாளராக பணியாற்றி வரும் சோனைக்குமார்(54), எழுத்தர்கள் நீலமேகம்(45), சதீஸ்குமார்(35) மற்றும் வசந்தகுமார்(38) ஆகிய 4 பேருடன், அவர்கள் வந்த காரில் சிவக்குமார் திருக்கோஷ்டியூர் சென்றார். அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட்ட பின்னர் 5 பேரும் ஊருக்கு செல்வதற்காக திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கார் கவிழ்ந்து விபத்து

கார் சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தபோது சிவக்குமார், தன்னை மானாமதுரையில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார். இந்தநிலையில் அவர்கள் வந்த கார் சிவகங்கையை அடுத்த வாணியங்குடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டயர் வெடித்து கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் சிவக்குமார் உள்பட 5 பேரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்துபோனார். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story