பெண் மர்ம சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


பெண் மர்ம சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2017 4:00 AM IST (Updated: 12 Jun 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குத்தாலம்,

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் கோமல் சாலை பகுதியை சேர்ந்த சுதந்திரவீரன் மகன் பிரேம்ஆனந்த். இவருடைய மனைவி மீனாட்சி (வயது30). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. 6 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்றுமுன்தினம் காலை மீனாட்சி தனது அண்ணன் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருக்கோடிகாவல் மகராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பரணிதரனிடம் செல்போனில் பேசினார். இதைத்தொடர்ந்து பரணிதரனும், அவருடைய தந்தை கோகுலசந்திரனும் மீனாட்சியை பார்ப்பதற்காக சேத்திரபாலபுரத்துக்கு சென்றனர். அங்கு மீனாட்சி, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து பரணிதரனும், கோகுலசந்திரனும் குத்தாலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் போராட்டம்

பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் நேற்று மீனாட்சியின் உடலை மயிலாடுதுறை அரசு மருத்துவமனை ஊழியர்கள் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் மீனாட்சியின் பெற்றோரும், உறவினர்களும் உடலை வாங்க மறுத்து, மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை உதவி கலெக்டர் சந்திரன், அரசு மருத்துவமனைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மீனாட்சியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனாட்சியின் உறவினர்கள், உதவி கலெக்டரிடம் முறையிட்டனர். இந்த போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story