துணிக்கடையில் வெளிநாட்டு வாழ் பெண் வக்கீலிடம் பணப்பை திருட்டு 2 பெண்களுக்கு வலைவீச்சு
துணிக்கடையில் வெளிநாட்டு வாழ் பெண் வக்கீலிடம் பணப்பை திருடிய 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மும்பை,
துணிக்கடையில் வெளிநாட்டு வாழ் பெண் வக்கீலிடம் பணப்பை திருடிய 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பெண் வக்கீல்மும்பையை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் ரிச்சா(வயது37). இவர் ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் நகரத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் என்ஜினீயர். இந்த தம்பதி உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அண்மையில் மும்பை வந்திருந்தனர்.
பின்னர் சம்பவத்தன்று மிராரோட்டில் உள்ள ஒரு துணிக்கடைக்கு சேலை எடுப்பதற்காக சென்றிருந்தனர். பின்னர் ரிச்சா தான் வாங்கிய சேலைக்கு பணம் கொடுப்பதற்காக பணப்பையை பார்த்தபோது, அது காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பணப்பை திருட்டுஇதுபற்றி அவர் நயாநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பணப்பை திருட்டு போன துணிக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அன்றைய தினம் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.
அப்போது ரிச்சா அந்த கடையில் சேலை வாங்கி கொண்டிருந்த நேரத்தில், வாடிக்கையாளர் போல் கடைக்குள் நுழைந்த இரண்டு பெண்கள் துணிக்கடை மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரிச்சாவின் பணப்பையை நைசாக திருடிக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அந்த பணப்பையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. வெளிநாட்டு வாழ் இந்திய பெண்ணிடம் பணப்பை திருடிய இரண்டு பெண்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.