பெற்றோர் கண்முன்னே பரிதாபம்: காட்டு யானை தாக்கி பள்ளி மாணவன் சாவு 3 பேர் படுகாயம்


பெற்றோர் கண்முன்னே பரிதாபம்: காட்டு யானை தாக்கி பள்ளி மாணவன் சாவு 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Jun 2017 12:00 AM GMT (Updated: 11 Jun 2017 10:22 PM GMT)

தேவாரத்தில் பெற்றோர் கண்முன்னே காட்டு யானை தாக்கியதில் பள்ளி மாணவன் பரிதாபமாக செத்தான். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேவாரம்,

தேனி மாவட்டத்தில் காட்டு யானைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிறைந்த இடமாக தேவாரம் வனப்பகுதி விளங்குகிறது. இங்குள்ள 18-ம்படி, சதுரங்கப்பாறை, சாக்குலூத்து, காப்புகாடு, பிள்ளையார் ஊற்று, தாழையூத்து உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாடுகின்றன.
இந்த மலை அடிவார பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அடிக்கடி அட்டகாசம் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

மாணவன் பலி

தாழையூத்து பகுதியில், தேவாரத்தை சேர்ந்த முருகன் (வயது 45) என்பவர் விவசாயம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது மனைவி வீருசின்னு (40), மகன்கள் அழகேசன் (12), விக்னேஷ் (10) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் தாழையூத்து நோக்கி சென்றனர்.

தாளையூத்து அருகே தண்ணீரில்லாத ஒரு ஓடையை அவர்கள் கடந்து சென்றனர். அப்போது, காட்டு யானை ஒன்று எதிரே நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காட்டுயானை அவர்களை நோக்கி வர தொடங்கியது. உடனே மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு முருகன் தனது குடும்பத்தினருடன் தப்பியோட முயன்றார்.

அவருடைய மகன் அழகேசன் மட்டும் யானையிடம் சிக்கி கொண்டான். யானை அவனை தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அழகேசன் பரிதாபமாக இறந்தான். தங்களது கண்முன்னே மகன் பலியானதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதற்கிடையே முருகன், வீருசின்னு, விக்னேஷ் ஆகிய 3 பேரையும் யானை துரத்தியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த அழகேசன், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

சாலை மறியல்

இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீயை போல் பரவியது. யானை தாக்கி இறந்த அழகேசன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள், விவசாயிகள் உத்தமபாளையம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தேவாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இமானுவேல்சேகரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அங்கு உத்தமபாளையம் வன அலுவலர் ஜீவனாவும் வந்தார். மறியலில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல் தவணையாக ரூ.50 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும் என்று வன அலுவலர் கூறினார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் மாணவன் அழகேசன் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story