ஒவ்வொரு நரம்புக்கும் கற்கும் திறன் உண்டு!


ஒவ்வொரு நரம்புக்கும் கற்கும் திறன் உண்டு!
x
தினத்தந்தி 12 Jun 2017 3:17 PM IST (Updated: 12 Jun 2017 3:17 PM IST)
t-max-icont-min-icon

செயற்கை நுண்ணறிவானது மனிதனுக்கு நிகரான சிந்தனை மற்றும் செயல்திறன் கொண்ட கருவிகளை ஒன்றன்பின் ஒன்றாக உருவாக்கிகொண்டே வருகிறது.

னிதனின் மதிநுட்பம் ‘செயற்கை நுண்ணறிவு’ எனும் அதிசய தொழில்நுட்பத்தை உருவாக்கியது. தற்போது செயற்கை நுண்ணறிவானது மனிதனுக்கு நிகரான சிந்தனை மற்றும் செயல்திறன் கொண்ட கருவிகளை ஒன்றன்பின் ஒன்றாக உருவாக்கிகொண்டே வருகிறது. உதாரணமாக, மனித மொழிகளை பேசும் கருவி, மனித உணர்வுகளை இனம் கண்டு அதற்கேற்றவாறு எதிர்வினை புரியும் கருவி, மனித மூளைக்குள் திறன்களை டவுன்லோடு செய்யும் கருவி என அதிசயமான பல புதிய கண்டு பிடிப்புகள் தொடர்கின்றன. 

ஆனால், மிகச்சிறந்த செயற்கை நுண்ணறிவு கருவிகளை எல்லாம் உருவாக்கும் அசாத்திய திறன்கொண்ட மனிதனுடைய நுண்ணறிவின் உறைவிடமான மூளை மற்றும் அதிலுள்ள நரம்புகள் தொடர்பான பல மர்ம முடிச்சுகளை மனிதனால் இன்னும் அவிழ்க்க முடியவில்லை என்பதே உண்மை. 

உதாரணமாக, மனிதனுடைய கற்றல் திறனுக்கு பல நரம்புகள் ஒன்றிணைந்த நரம்பு கூட்டமைப்பு அவசியம் என்றும், அத்தகைய அமைப்பிலுள்ள அனைத்து நரம்புகளும் ஒன்றுடன் மற்றொன்று தொடர்புகொண்டு வினையாற்றுவதன் காரணமாகவே கற்றல் சாத்தியமாகிறது என்றுதான் இதற்கு முந்தைய நரம்பியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.  

ஆனால், உலகில் முதல் முறையாக, மனிதனின் மூளையிலுள்ள ஒவ்வொரு நரம்புக்கும் கற்கும் திறன் உண்டு என்று புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக, ஒரு குறிப்பிட்ட சைகைக்கு (சிக்னல்) எதிர்வினை புரிவது மட்டுமல்லாமல், கற்றலுக்கு அவசியமான தொடர் நிகழ்வுகளை மேற்கொள்ளும் திறன் தனி நரம்புகளுக்கு உண்டு என்பதை இங்கிலாந்திலுள்ள லன்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். 

மனிதனின் ‘மோட்டார் நகர்வு’களைக் கட்டுப்படுத்தும், மனித மூளையில் உள்ள பர்கிஞ்சி உயிரணுக்கள் அல்லது நரம்புகள் ஒவ்வொன்றுக்கும் கற்கும் திறன் உண்டு என்று உறுதி செய்துள்ளனர் ஆய்வாளர்கள். அதாவது, இதற்கு முன்னர் பல நரம்புகள் இணைந்த நரம்புக் கூட்டமைப்பின் செயல்பாடுகளாக கருதப்பட்ட கற்றல் மற்றும் சிறுமூளைக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு, தனி நரம்புகளுக்கு உள்ளே நிகழக்கூடிய உயிரணு இயங்குமுறைகள் காரணமாக இருக்கக்கூடும் என்று தற்போது கருதப்படுகிறது. 

ஒரு தனி நரம்பின் தகவல் சேமிப்புத் திறன் அல்லது கொள்ளளவு இதற்கு முன்னர் கருதப்பட்ட அளவைவிட பல மடங்கு அதிகம் என்றும், முற்றிலும் வித்தியாசமான இயல்பு கொண்டது என்பதும் இந்த புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், நமது மூளையின் கற்றல் திறனனானது இதற்கு முன்னர் கருதியதை விட பல மடங்கு அதிகம் என்கிறார் ஆய்வாளர் டான்ஆண்டர்ஸ் ஜிரேன்ஹெட். 

முக்கியமாக, தற்போதுள்ள குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிசம், ஏ.டி.ஹெச்.டி மற்றும் மொழி கற்பது தொடர்பான குறைபாடுகள் தனிப்பட்ட நரம்புகள் பாதிக்கப்படுவதால் கூட நிகழலாம் எனும் புதிய புரிதல் தற்போது ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த ஆய்வின் முடிவுகளின் உதவியுடன் ஆட்டிசம் போன்ற குறைபாடுகளுக்கான புதிய சிகிச்சை முறைகளைக் கண்டறிய முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். 

இது தவிர, தனி நரம்புகளின் கற்றல் திறன் தொடர்பான இந்த புதிய கண்டுபிடிப்பின் உதவியுடன், நரம்புக் கூட்டமைப்புகளை  (neural network)  பயன்படுத்துகின்ற ஆழக் கற்றல் (deep learning) மற்றும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் போன்றவற்றை மேலும் பல மடங்கு மேம்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது. 

ஆக மொத்தத்தில், நமது மூளையானது தனது ஒவ்வொரு நரம்பு மூலமாக கற்கிறது எனும் அறிவியல் உண்மையானது, செயற்கை நுண்ணறிவு முன்னேற்றங்களை ஏற்படுத்தி மனிதனுக்கும், எந்திரங்களுக்கும் இடையிலான இடைவெளியை வெகுவாகக் குறைக்கும் என்று கருதப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Next Story