தேனி நகரில் காட்சிப்பொருளாக உள்ள தண்ணீர் தொட்டி போராட முயன்ற மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை


தேனி நகரில் காட்சிப்பொருளாக உள்ள தண்ணீர் தொட்டி போராட முயன்ற மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 13 Jun 2017 4:15 AM IST (Updated: 13 Jun 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

தேனி நகரில் 10 மாதங்களாக தண்ணீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளதால் பொதுமக்கள் போராட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேனி,

தேனி அல்லிநகரம் நகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட பாரஸ்ட்ரோடு 9-வது தெருவில், ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்து, தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. மின்மோட்டார் பழுதடைந்ததால் இந்த தண்ணீர் தொட்டி கடந்த 10 மாதங்களாக பயன்பாடு இன்றி காட்சிப் பொருளாக உள்ளது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் தண்ணீருக்காக பரிதவித்தனர். மேலும் அருகில் உள்ள தெருக்களில் சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிகுடங்களுடன் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட முயன்ற மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நகராட்சி அதிகாரிகளிடம் பேசி, தண்ணீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அப்போது, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் கூறிச் சென்றனர்.


Next Story