‘வசதி படைத்த விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது’

வசதி படைத்த விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட மாட்டாது என மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் அறிவித்து உள்ளார்.
மும்பை,
வசதி படைத்த விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட மாட்டாது என மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் அறிவித்து உள்ளார்.
விவசாயிகள் போராட்டம்மராட்டியத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு சரியான விலை நிர்ணயம், பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த 1–ந்தேதி முதல் விவசாயிகள் மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக ஆளும் பா.ஜனதா அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தநிலையில் 11–ந் தேதிக்குள் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்காவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும் என மாநில அரசுக்கு விவசாய சங்கங்கள் கெடு விதித்தன.
இதற்கிடையே விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்காவிட்டால், ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என சிவசேனாவும் போர்க்கொடி தூக்கியது. இதனால் நிலைமை தீவிரமடைவதை உணர்ந்த முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அளிப்பது குறித்து ஆய்வு செய்ய 6 மந்திரிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்தார்.
பேச்சுவார்த்தைஇந்த குழுவுக்கு மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தலைமை தாக்கினர். இந்த குழுவினர் நேற்று முன்தினம் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மும்பையில் உள்ள சயாத்திரியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது விவசாய சங்கத்தினர் தங்கது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
இதையடுத்து மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி அளிக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி கூறினார். மேலும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து ஆய்வு செய்ய புதிதாக குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். மந்திரியின் உத்தரவாதத்தை ஏற்று விவசாயிகள் தங்கலது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
கடன் தள்ளுபடி கிடையாதுஇந்தநிலையில் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் இது குறித்து கூறியிருப்பதாவது:–
நாங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்குவதற்கு குழு அமைக்க காரணம், கடந்த (2007–2008) பயிர்க்கடன் தள்ளுபடியின் போது ஏற்பட்ட குளறுபடிகளே காரணம் ஆகும். நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், மராட்டியத்தில் பெரும் வசதி படைந்த விவசாயிகளும் கடன் தள்ளுபடியால் பலன் அடைந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதை நாங்கள் தவிர்க்க நினைக்கிறோம். இவ்வாறு வசதி படைத்த விவசாயிகள் பலன் அடைவதை தடுப்பதே இந்த குழுவின் முக்கிய பணியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம் வசதி படைத்த விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட மாட்டாது என்பது தெரியவந்துள்ளது.