சைக்கிள் மீது லாரி மோதியதில் 10-ம் வகுப்பு மாணவன் சாவு பொதுமக்கள் சாலை மறியல்


சைக்கிள் மீது லாரி மோதியதில் 10-ம் வகுப்பு மாணவன் சாவு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Jun 2017 4:30 AM IST (Updated: 13 Jun 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

பொம்மிடியில் சைக்கிள் மீது லாரி மோதி 10-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான் இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள புதுஒட்டுப்பட்டியை சேர்ந்தவர் பழனி, தையல் தொழிலாளி. இவருடைய மகன் தமிழரசு (வயது14). இவன் பொ.மல்லாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை மாணவன் சைக்கிளில் பள்ளிக்கு வந்தான். அப்போது நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு லாரி பள்ளிக்கூட நுழைவாயில் அருகில் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மாணவன் தமிழரசு பலத்த காயம் அடைந்தான். உடனே அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் மாணவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவர்கள், பொதுமக்கள் லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சரவணன், அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது லாரி டிரைவர் அந்த பகுதியில் உள்ள சந்துக்கடையில் மது வாங்கி குடித்துவிட்டு லாரியை ஓட்டி வந்த போது மாணவன் மீது மோதியது. இதனால் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து மாணவன் தமிழரசுவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி நுழைவாயில் முன்பு லாரி மோதி மாணவன் இறந்ததால் மாணவ-மாணவிகளிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story