புதிதாக மதுக்கடை திறக்க கூடாது குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


புதிதாக மதுக்கடை திறக்க கூடாது குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 13 Jun 2017 4:15 AM IST (Updated: 13 Jun 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

எட்டியானூர் சாலையில் புதிதாக மதுக்கடையை திறக்க கூடாது என்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

பாலக்கோடு தாலுகா பெலமாரனஅள்ளி ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதுநாள் வரை மயான வசதி இல்லாமல் உள்ளது. எங்கள் கிராமத்திற்கு அருகே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் மயான வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மதுக்கடை

நல்லம்பள்ளி தாலுகா தின்னஅள்ளி, நல்லசேனஅள்ளி, மாதேமங்கலம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் தின்னஅள்ளி ஊராட்சி எட்டியானூர்-கோணையம்பட்டி சாலையில் புதிதாக மதுக்கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த சாலையில் மதுக்கடை திறந்தால் அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதுடன் அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே இந்த மதுக்கடையை திறக்க கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் விவேகானந்தன் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story