19 தொழிலாளர்களை பலி கொண்ட வெடிமருந்து தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்


19 தொழிலாளர்களை பலி கொண்ட வெடிமருந்து தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Jun 2017 4:30 AM IST (Updated: 13 Jun 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

19 தொழிலாளர்களை பலி கொண்ட வெடிமருந்து தொழிற்சாலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 5 கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் கே.ராஜாமணி தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது துறையூர் தாலுகா தளுகை ஊராட்சிக்கு உட்பட்ட டி.முருங்கப்பட்டி, டி.மங்கப்பட்டி, டி.பாதர்பேட்டை, வெள்ளாளப்பட்டி, நாகையநல்லூர் ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முன்னாள் ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமையில் 2 பஸ்களில் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நிரந்தரமாக மூட வேண்டும்

டி.முருங்கப்பட்டியில் இயங்கி வந்த வெடி மருந்து தொழிற்சாலையில் கடந்த 1-12-2016 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 19 தொழிலாளர்கள் பலி ஆனார்கள். மேலும் வெடி விபத்தினால் எங்கள் கிராமத்தில் பல வீடுகளில் கண்ணாடி, ஜன்னல்கள் உடைந்து உள்ளன. மாவட்ட நிர்வாகத்தினால் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டு இருந்த தடையில்லா சான்று விபத்துக்கு பின்னர் ரத்து செய்யப்பட்டு விட்டது. தொழிற்சாலை நடத்துவதற்கான உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் மூல பொருட்களை எடுக்கிறோம் என்ற பெயரில் அந்த தொழிற்சாலைக்குள் ஆட்கள் போவதும் வருவதுமாக இருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியாமல் சட்ட விரோதமாக இந்த தொழிற்சாலை இயங்கி வருவது போல் தெரிகிறது. எனவே அதனை நிரந்தரமாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் மண்மலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதையும் மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராஜாமணி அந்த தொழிற்சாலை மீண்டும் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காது. கோவிலுக்கு செல்லும் பாதையையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கப்படும், என்று உறுதி அளித்தார்.

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் அளுந்தூர் ஊராட்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 20 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறி பெண்கள் காலி குடங்களுடன் வந்து மனு கொடுத்தனர்.

சாதி பிரச்சினை உருவாக்க முயற்சி

மனித நேய ஜனநாயக கட்சியினர் மாவட்ட செயலாளர் இப்ராகிம் ஷா தலைமையில் வந்து கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

இந்து, முஸ்லிம் மக்கள் அமைதியாக வாழும் இனாம்குளத்தூரில் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் சிலர் செயல்பட்டு உள்ளனர். மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா ஊர்வலத்தை இனாம்குளத்தூர் கடைவீதி வழியாக செல்ல போலீசார் அனுமதித்து உள்ளனர். முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கும் கடை வீதி வழியாக ஊர்வலம் சென்றதால் தேவை இல்லாத பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. போலீசார் சாதி பிரச்சினை என்று கூறி வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஊர்வலத்தில் மோதல் ஏற்படுவதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் மெத்தனமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கலெக்டர் உத்தரவு

மேலும் பல்வேறு பிரச்சினைகள், தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி எத்தனை நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும், குறை எப்போது தீர்க்கப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும். தீர்க்க முடியாத கோரிக்கை என்றாலும் முடியாது என்ற பதிலை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் துறைவாரியாக பங்கேற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டு உள்ளார். பொதுமக்களை தேவை இல்லாமல் அலைய விடக்கூடாது என்பதில் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும், அவர்களுக்கு நம் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும், என்றும் கூறினார்.


Related Tags :
Next Story