திருப்பனந்தாள் காசி மடத்தில் குமரகுருபர சுவாமிகள் மகேஸ்வர பூஜை


திருப்பனந்தாள் காசி மடத்தில் குமரகுருபர சுவாமிகள் மகேஸ்வர பூஜை
x
தினத்தந்தி 12 Jun 2017 10:45 PM GMT (Updated: 12 Jun 2017 9:09 PM GMT)

திருப்பனந்தாள் காசி மடத்தில் குமரகுருபரசுவாமிகள் மகேஸ்வர பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிடைமருதூர்,

தமிழையும், சைவ சமயத்தையும் வளர்த்தவர் குமரகுருபர சுவாமிகள். கந்தர் கலிவெண்பா, மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நீதிநெறி விளக்கம், மதுரை கலம்பகம், பண்டார மும்மணிக்கோவை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பர செய்யுட் கோவை, காசிக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, கயிலைக் கலம்பகம், காசித்துண்டி விநாயகர் பதிகம் உள்ளிட்ட பல நூல்களை இயற்றி உள்ளார். தருமபுரம் மாசிலாமணி தேசிகரை ஞான குருவாக கொண்டார்.

மகேஸ்வர பூஜை

காசியில் ஸ்ரீ குமாரசாமி மடமும், ஸ்ரீ கேதாரநாத் கோவிலும் குமரகுருபரரோடு தொடர்புடையவை. இம்மடத்தின் ஆறாம் அதிபர் காலத்தில் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் காசி திருமடம் நிறுவப்பட்டது. திருப்பனந்தாள் காசித்திருமடத்தின் 21-வது அதிபர் காசிவாசி முத்து குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் ஆலோசனையின் பேரில் குமரகுருபர சுவாமிகள் மகேஸ்வர பூஜை திருப்பனந்தாள் காசி மடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குமரகுருபரசுவாமிகள் சிலைக்கு பால், பன்னீர் உள்ளிட்ட அனைத்து வகையான அபிஷேகங்களும் நடைபெற்றன. அபிஷேகங்களை காசிமடத்து அதிபர் முத்துக்குமாரசுவாமிகளே செய்தார். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து காசி மடத்து அதிபர், பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.


Related Tags :
Next Story