அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து முக்குலத்து புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து முக்குலத்து புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2017 11:00 PM GMT (Updated: 12 Jun 2017 9:09 PM GMT)

அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து நாகையில் முக்குலத்து புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில், தமிழக அரசின் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டை கண்டித்து தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில நிறுவன தலைவர் ஆறு.சரவணன் தலைமை தாங்கினார். நாகை, திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகுகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் மின்வெட்டை பயன்படுத்தி திருட்டு, வழிபறி உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர். எனவே டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டை போக்கி சீரான மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு நாடார் மக்கள் பேரவை தலைவர் ஏ.பி.ராஜா ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டார். இதில் முக்குலத்து புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாகை நகர துணை அமைப்பாளர் மலைராஜன் நன்றி கூறினார்.

Next Story