வாணாபுரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்


வாணாபுரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Jun 2017 4:15 AM IST (Updated: 13 Jun 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணாபுரம்,

தண்டராம்பட்டு தாலுகா பேராயம்பட்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஆழ்துளை கிணறுகள் மற்றும் கிணறுகளில் குடிநீர் இல்லாததால், சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அதனால் பொதுமக்கள் அருகேயுள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

குடிநீர் வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலை பொதுமக்கள், பொது குடிநீர் குழாயில் தண்ணீர் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் காலை 8 மணி வரை குடிநீர் வரவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை குங்கிலியநத்தம் பஸ் நிறுத்தத்திற்கு வந்து திடீரென சாலையில் அமர்ந்து குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணாபுரம் வருவாய் ஆய்வாளர் ஷம்ஷாத்பேகம், கிராம நிர்வாக அலுவலர் பழனி மற்றும் வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

வட்டார வளர்ச்சி அலுவலர் முற்றுகை

அப்போது பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வந்தால் தான் சாலை மறியலை கைவிடுவோம் என்று கூறினார்கள். இதனையடுத்து 11 மணி அளவில் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் பரிதிமால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்தார்.

அப்போது பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிதிமாலை முற்றுகையிட்டு, தங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மின்மோட்டார் பழுதாகி பல நாட்கள் ஆகிறது. அதனை சீரமைக்க வேண்டும். மேலும் தடையில்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை என்று கூறினார்கள். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பரிதிமால், ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

போக்குவரத்து பாதிப்பு

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர் இல்லாததால் பேராயம்பட்டு பகுதியை சேர்ந்த பெரும்பாலான மாணவ - மாணவிகள் நேற்று பள்ளி, கல்லூரிக்கு செல்லவில்லை.
1 More update

Next Story