கிருமாம்பாக்கத்தில் பரபரப்பு: அரசு காண்டிராக்டர் வீட்டில் 28 பவுன் நகைகள் கொள்ளை


கிருமாம்பாக்கத்தில் பரபரப்பு: அரசு காண்டிராக்டர் வீட்டில் 28 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 12 Jun 2017 10:45 PM GMT (Updated: 12 Jun 2017 9:38 PM GMT)

கிருமாம்பாக்கத்தில் அரசு காண்டிராக்டர் வீட்டில் 28 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. போலீஸ் நிலையம் எதிரிலேயே நடந்த இந்த துணிகர சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகூர்,

புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே வசித்து வருபவர் தட்சணாமூர்த்தி. இவர் அரசு அங்கன்வாடி மையங்களுக்கு மளிகை பொருட்கள் சப்ளை செய்யும் காண்டிராக்டர் ஆவார். கடந்த 5-ந் தேதி இவரது மகன் உதயகுமாருக்கு திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தட்சணாமூர்த்தி குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றார்.

நகை, பணம் கொள்ளை

நேற்று அதிகாலை தட்சணாமூர்த்தி வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் மற்றும் மகனுக்கு சீர்வரிசையாக போடப்பட்ட 18 பவுன் நகைகள், 1½ கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும்.
இதுபற்றி கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தட்சணாமூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம், இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி ஆகியோர் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீசுக்கு சவால்

தட்சணாமூர்த்தியின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு தெரிந்து கொண்ட மர்மஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, அங்கிருந்த அரிவாளால் பீரோவை வெட்டி திறந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர். தடயவியல் நிபுணர்களை வரவழைத்து வீட்டில் தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாய் வர வழைத்து துப்பு துலக்கியபோது, வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி அங்கேயே மோப்பநாய் நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கொள்ளை பற்றி தகவல் அறிந்த அமைச்சர் கந்தசாமி சம்பவ இடத்துக்கு வந்து, நகை -பணத்தை இழந்த தட்சணாமூர்த்திக்கு ஆறுதல் கூறினார். இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்மஆசாமிகளை விரைவில் கைது செய்து, பொருட்களை மீட்க போலீசாரை அவர் வலியுறுத்தினார். கொள்ளை நடந்த வீட்டுக்கு எதிரில் தான் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் போலீசுக்கு சவால் விடும் வகையில் வீட்டு கதவை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story