கடப்பாரையால் அரசு ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி குடித்து விட்டு வந்து தினமும் தகராறு செய்ததால் ஆத்திரம்


கடப்பாரையால் அரசு ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி குடித்து விட்டு வந்து தினமும் தகராறு செய்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 13 Jun 2017 4:45 AM IST (Updated: 13 Jun 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பத்தில் மது குடித்துவிட்டு வந்து தினமும தகராறு செய்த அரசு ஊழியரை அவரது மனைவியே கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியாங்குப்பம்,

புதுவை அரியாங்குப்பம் மாஞ்சாலை அன்னை இந்திராநகரை சேர்ந்தவர் இசைமணி (வயது 45). இவர் சமூக நலத்துறையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கோமதி (41) என்ற மனைவியும், இளஞ்செழியன் (23), இசைவேந்தன் (21) ஆகிய 2 மகன்களும் இருந்தனர். மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான இசைமணி தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடன் கோபித்துக் கொண்டு கோமதி தனது தங்கை வீட்டில் போய் தங்கி இருந்தார். இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவர் தனது வீட்டுக்கு திரும்பினார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இசைமணி குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இதை தட்டிக் கேட்டதால் அவருக்கும், கோமதிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் பிணம்

நள்ளிரவு 12 மணிக்கு மேல் இவர்கள் தகராறு செய்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கணவரின் செயலால் பொறுமை இழந்த கோமதி ஆவேசம் அடைந்து, அவரை தாக்கினார். இதில் இசைமணி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது கதவில் இருந்த இரும்புக் கம்பியில் மோதி விழுந்ததில் இசைமணி காயமடைந்தார். கடும் ஆத்திரத்தில் இருந்த கோமதி ரத்தம்வடிந்த நிலையில் கிடந்த அவரை வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து வந்து தலையில் அடித்ததாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த இசைமணி அங்கேயே சரிந்து விழுந்தார். இதன்பின் வீட்டின் மொட்டை மாடிக்கு கோமதி சென்றுவிட்டார். அதிகாலை 3 மணியளவில் கோமதி கீழே இறங்கி வந்து பார்த்தபோது இசைமணி பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது தான் குடிபோதையில் வந்து தகராறு செய்த போது இசைமணியை அவரது மனைவி கோமதி கடப்பாரையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

மனைவி கைது

இதுபற்றி அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த இசைமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோமதியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

Next Story