சேலம் அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்-போலீசாருடன் தள்ளுமுள்ளு


சேலம் அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்-போலீசாருடன் தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 12 Jun 2017 9:57 PM GMT (Updated: 12 Jun 2017 9:57 PM GMT)

சேலம் அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெண்கள் சிலர் கற்களை எடுத்து கடையின் பூட்டை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருடன் தள்ளுமுள்ளும் நடந்தது.

கொண்டலாம்பட்டி,

சேலம் அருகே சிவதாபுரம் பனங்காடு பகுதியில் சித்தர்கோவில் செல்லும் மெயின்ரோட்டில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடை அருகில் கோவில் மற்றும் குடியிருப்புகள் இருப்பதால் மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில், பனங்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திடீரென மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சேலம் உதவி போலீஸ் கமிஷனர் அன்பு தலைமையில் கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் ஏராளமான போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களில் சிலர், மதுக்கடைக்கு எதிராகவும், அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

பெண்கள் ஆவேசம்

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதியம் 12 மணிக்கு திறக்க வேண்டிய மதுக்கடை 2 மணி வரை ஆகியும் திறக்காமல் இருந்தது. அப்போது, சில பெண்கள் திடீரென ஆவேசம் அடைந்து கீழே கிடந்த கற்களை எடுத்து மதுக்கடையின் பூட்டை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த போலீசார் அங்கு சென்று பெண்களின் கைகளில் இருந்த கற்களை பிடுங்கி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் அங்கிருந்த இரும்பு தடுப்பு கம்பிகளை தூக்கி ரோட்டில் வீசினர். அதை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அந்த சமயத்தில் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர், திடீரென மயங்கி விழுந்தார். பிறகு அந்த பெண்ணுக்கு உடனடியாக தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளியவைத்து வீட்டிற்கு செல்லுமாறு போலீசார் அனுப்பி வைத்தனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தெய்வநாயகி மற்றும் சிவதாபுரம் வருவாய் ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது,
பனங்காட்டில் உள்ள மதுக்கடையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், ‘பார்‘ இல்லாததால் குடிமகன்கள் அருகில் உள்ள வீடுகள் முன்பும், கோவிலில் வைத்தும் மது அருந்துகிறார்கள் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்னும் ஒரு மாதத்திற்குள் இங்கிருந்து மதுக்கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. பின்னர், போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story