கர்நாடகத்தில் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை பஸ்–ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின


கர்நாடகத்தில் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை பஸ்–ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின
x
தினத்தந்தி 13 Jun 2017 3:52 AM IST (Updated: 13 Jun 2017 3:52 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த முழு அடைப்புக்கு போராட்டத்துக்க ஆதரவு இல்லை. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின.

பெங்களூரு,

கர்நாடகத்தில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த முழு அடைப்புக்கு போராட்டத்துக்க ஆதரவு இல்லை. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கோலார்–சிக்பள்ளாப்பூரில்...

கலசா–பண்டூரி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மேகதாதுவில் புதிய அணை கட்ட வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு உள்ளிட்ட வறண்ட பகுதிகளுக்கு நிரந்தர நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 12–ந் தேதி(நேற்று) கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்து இருந்தார்.

அதன்படி கர்நாடகத்தில் நேற்று முழு அடைப்பு நடைபெற்றது. ஆனால் கர்நாடகத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இந்த முழு அடைப்புக்கு மக்களிடையே வரவேற்பு இருந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிக்கப்பட்டது. அந்த மாவட்டங்களில் அரசு–தனியார் பஸ்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. அங்கு கன்னட அமைப்பினர் சாலைகளில் டயர்களுக்கு தீ வைத்து எரித்தனர்.

பஸ்–ஆட்டோக்கள் ஓடின

மற்றபடி மாநிலத்தின் தலைநகரான பெங்களூருரில் அரசு பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள், மெட்ரோ ரெயில் வழக்கம் போல் ஓடின. அரசு மற்றும் தனியார் பள்ளி–கல்லூரிகள் எப்போதும் போல் செயல்பட்டன. வணிக நிறுவனங்கள், திரையரங்குகளில் சினிமா காட்சிகள் திரையிடப்பட்டன. சிறிய கடைகள், வணிக நிறுவனங்கள், பெரிய வணிக வளாகங்கள் திறக்கப்பட்டு இருந்தன. தொழிற்சாலைகள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உள்பட அனைத்து தொழில் நிறுவனங்களும் வழக்கம் போல் செயல்பட்டன. அதில் பணியாற்றும் ஊழியர்கள் எந்த பிரச்சினையும் இன்றி வேலைக்கு வந்து சென்றனர்.

நகரில் எப்போதும் போல் அனைத்து சாலைகளிலுமே வாகனங்கள் நிரம்பி போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. காய்கறி, பூ சந்தைகள் வழக்கம்போல் செயல்பட்டன. அங்கு மக்களின் நடமாட்டம் வழக்கம் போலவே இருந்தன. நகரின் அனைத்து பகுதிகளிலுமே மக்களின் நடமாட்டம் எப்போதும் போல் இருந்தது. முழு அடைப்புக்கான அறிகுறியே தென்படவில்லை.

இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை

மைசூரு, சாம்ராஜ்நகர், சித்ரதுர்கா, துமகூரு, மங்களூரு, சிவமொக்கா, தாவணகெரே, பல்லாரி, கார்வார், உப்பள்ளி–தார்வார், பெலகாவி, ஹாவேரி, ராய்ச்சூர், கொப்பல், யாதகிரி, விஜாயப்புரா, பாகல்கோட்டை, கலபுரகி உள்ளிட்ட பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பஸ், ஆட்டோ உள்பட அனைத்து சேவைகளும் வழக்கம்போலவே இருந்தன. உப்பள்ளியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ராமநகரில் கன்னட அமைப்பினர் பெங்களூரு–மைசூரு சாலையில் டயர்களுக்கு தீ வைத்து போராட்டம் நடத்தினர். அவர்கள் பிரதமர் மோடி மற்றும் சித்தராமையாவின் உருவ பொம்மைகளுக்கு தீ வைத்து எரித்தனர். அங்கு திறக்கப்பட்டு இருந்த சில கடைகளை மூடும்படி போராட்டக்காரர்கள் கட்டாயப்படுத்தினர். இதனால் அங்கு கடைகள் மூடப்பட்டன. தள்ளுவண்டி காய்கறி கடைகளை கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வாட்டாள் நாகராஜ் கைது

பெங்களூருவில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் விதான சவுதாவை முற்றுகையிட டவுன் ஹாலில் இருந்து ஊர்வலமாக செல்ல முயற்சி செய்தனர். அவர்களை கார்ப்பரே‌ஷன் சர்க்கிளில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து பஸ்சில் ஏற்றிச் சென்றனர்.

அதேபோல் கர்நாடக ரக்‌ஷண வேதிகே தலைவர் பிரவீன்ஷெட்டி தலைமையில் ஆர்.டி.நகரில் இருந்து விதான சவுதாவை முற்றுகையிடு வந்த போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஒட்டுமொத்தமாக கர்நாடகத்தில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நாராயணகவுடா கடும் எதிர்ப்பு

கர்நாடக ரக்‌ஷண வேதிகே(நாராயணகவுடா அணி) தலைவர் நாராயணகவுடா, இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இவ்வாறு அடிக்கடி முழு அடைப்பு நடத்துவதால் மக்களுக்கு தான் சிரமம் ஏற்படுகிறது. மேலும் வாட்டாள் நாகராஜ் சர்வாதிகாரமாக செயல்படுகிறார். அவர் நான் என்ற தோரணையில் செயல்படுகிறார். இது தவறு. நாங்கள் என்ற மனநிலையுடன் அவர் போராட வேண்டும். அவர் முழு அடைப்பு என்று சொல்லிவிட்டால் மாநிலத்தில் முழு அடைப்பு நடந்துவிடும் என்று அவர் நினைத்தார். முழு அடைப்பு போராட்டங்களால் வெறுப்படைந்துள்ள மக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இனிமேலாவது வாட்டாள் நாகராஜ் அனைத்து கன்னட சங்கங்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்“ என்றார்.

நாராயணகவுடா தெரிவித்த இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வாட்டாள் நாகராஜ், “நாங்கள் அனைத்து கன்னட சங்கங்களையும் ஒருங்கிணைத்து தான் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். அவர் வேண்டுமென்றே முழு அடைப்புக்கு எதிராக கருத்து தெரிவிக்கிறார். அவர் வேண்டுமானால் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தட்டும். மக்களின் பிரச்சினைகளுக்காக நடைபெறும் இத்தகைய போராட்டத்தை குறை கூறுவதை அவர் நிறுத்த வேண்டும். அரசு திட்டமிட்டு இந்த முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி அடையாமல் செய்துள்ளது. மாநில அரசு எங்களின் போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்கிறது. இது சரியல்ல“ என்றார்.


Next Story