குன்றத்தூர் அருகே வீட்டின் பால்கனி கதவை உடைத்து உள்ளே புகுந்து 28 பவுன் நகை திருட்டு


குன்றத்தூர் அருகே வீட்டின் பால்கனி கதவை உடைத்து உள்ளே புகுந்து 28 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 12 Jun 2017 10:46 PM GMT (Updated: 12 Jun 2017 10:46 PM GMT)

குன்றத்தூர் அருகே, வீட்டின் பால்கனி கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், 28 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 750 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த கோவூர், வத்சலா அவென்யூவைச் சேர்ந்தவர் சிவசங்கரன்(வயது 35). இவர், குன்றத்தூரில் சொந்தமாக கல்வி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். கடந்த 7-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான வேலூருக்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றபோது வீட்டு மாடியில் உள்ள பால்கனி கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ள 3 படுக்கை அறைகளில் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோக்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தன.

28 பவுன் நகை திருட்டு

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில், சிவசங்கரன் குடும்பத்துடன் சொந்த ஊர் சென்று இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், நள்ளிரவில் அவரது வீட்டின் பால்கனி கதவை உடைத்து உள்ளே புகுந்து படுக்கை அறைகளில் இருந்த 3 பீரோக்களையும் உடைத்து அதில் இருந்த 28 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 750 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

மேலும் மர்மநபர்கள், நகை பணத்தை திருடும் போது வீட்டில் உள்ள மின்விளக்கு வெளிச்சத்தில் தங்களை வெளியில் இருந்து யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக ஜன்னலில் துணியை வைத்து மறைத்து உள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த பொருட் களை குளியல் அறைக்கு எடுத்து சென்று அங்கு வைத்து நிதானமாக பிரித்து எடுத்து சென்று இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருட்டு சம்பவங்களை தடுக்க அந்த பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story