ஏர்வாடி அருகே நடிகை ராதாவின் தோட்டத்தில் மேய்ந்த 10 ஆடுகள் விஷம் வைத்து சாகடிப்பு


ஏர்வாடி அருகே நடிகை ராதாவின் தோட்டத்தில் மேய்ந்த 10 ஆடுகள் விஷம் வைத்து சாகடிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2017 11:58 PM GMT (Updated: 2017-06-13T05:28:50+05:30)

ஏர்வாடி அருகே நடிகை ராதாவின் தோட்டத்தில் மேய்ந்த 10 ஆடுகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டன. இது தொடர்பாக தோட்ட காவலாளி கைது செய்யப்பட்டார்.

ஏர்வாடி,

ஏர்வாடி அருகே நடிகை ராதாவின் தோட்டத்தில் மேய்ந்த 10 ஆடுகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டன. இது தொடர்பாக தோட்ட காவலாளி கைது செய்யப்பட்டார்.

நடிகை ராதாவின் தோட்டம்


நடிகை ராதாவுக்கு சொந்தமான தோட்டம் நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தில் உள்ளது. இந்த கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இந்த தோட்டத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த ரவி(வயது 53) என்பவர் தங்கி இருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் தோட்டத்தில் வாழைகளையும் பயிர் செய்து வந்தார்.

மலை அடிவாரத்தில் உள்ளதால் காட்டுப்பன்றிகள் அடிக்கடி தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை நாசம் செய்து வந்தன. மேலும் அந்த பகுதியில் உள்ள ஆடுகளும் அடிக்கடி தோட்டத்துக்குள் புகுந்து மேய்ந்து வந்தன.

விஷம் வைத்து சாகடிப்பு

தோட்டத்துக்குள் காட்டுப்பன்றிகள், ஆடுகள் புகுந்து வாழைகளை நாசம் செய்வதை கண்டு ஆத்திரம் அடைந்த ரவி, காட்டுப்பன்றிகள், ஆடுகளுக்கு விஷம் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏர்வாடி வடக்கு ரத வீதியைச் சேர்ந்த ராமலிங்கம்(70) என்பவருக்கு சொந்தமான ஆடுகள் மற்றும் சிலரது ஆடுகள் என 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் ராதாவின் தோட்டத்தில் மேய்ந்தன.

அங்கு வைக்கப்பட்டு இருந்த விஷத்தை அறியாத ஆடுகள் அதனை தின்றன. சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக செத்து விழுந்தன. இப்படியாக 10 ஆடுகள் தோட்டத்திலேயே செத்து விழுந்தன. இதைக்கண்டு ராமலிங்கம் அதிர்ச்சி அடைந்தார். தனது கண்முன்னே தன்னுடைய ஆடுகள் செத்து விழுவதை கண்ட அவர் கண்ணீர் விட்டார்.

காவலாளி கைது

இது தொடர்பாக ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை விஷம் வைத்து சாகடித்ததாக தோட்டத்து காவலாளி ரவியை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தளவாய்புரத்தை சேர்ந்த சாலமோனை(45) போலீசார் தேடி வருகின்றனர். நடிகை ராதாவின் தோட்டத்தில் மேய்ந்த 10 ஆடுகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story