வல்லநாடு அருகே, லாரி கவிழ்ந்து ரோட்டில் பாமாயில் எண்ணெய் ஆறாக ஓடியது போக்குவரத்து பாதிப்பு


வல்லநாடு அருகே, லாரி கவிழ்ந்து ரோட்டில் பாமாயில் எண்ணெய் ஆறாக ஓடியது போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 13 Jun 2017 9:30 PM GMT (Updated: 13 Jun 2017 12:00 PM GMT)

வல்லநாடு அருகே பாமாயில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம்,

வல்லநாடு அருகே பாமாயில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லாரி கவிழ்ந்து...

தூத்துக்குடியில் இருந்து பாமாயில் டின்கள் மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் அடங்கிய அட்டை பெட்டிகள் லோடு ஏற்றிய லாரி, நேற்று காலையில் நெல்லை மாவட்டம் அம்பைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. தூத்துக்குடி அண்ணா நகர் 5–வது தெருவைச் சேர்ந்த முனியராஜ் (வயது 47) லாரியை ஓட்டிச் சென்றார்.

காலை 11.15 மணி அளவில் வல்லநாட்டை கடந்து வசவப்பபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, ஒரு மூதாட்டி திடீரென்று ரோட்டின் குறுக்காக கடந்து செல்ல முயன்றுள்ளார். இதனால் டிரைவர் முனியராஜ் பிரேக் பிடித்தபோது, எதிர்பாராதவிதமாக லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் முனியராஜ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

ஆறாக ஓடிய பாமாயில்


லாரியில் இருந்த பாமாயில் அடைக்கப்பட்ட டின்கள், பாக்கெட்டுகள் உடைந்ததால், ரோட்டில் பாமாயில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ரோடு முழுவதும் எண்ணெய் படலமாக காட்சி அளித்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்– இன்ஸ்பெக்டர் வீரபாகு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு, போக்குவரத்தை சரி செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, சாலையில் உள்ள எண்ணெய் படலம் மீது மணல் தூவி அவற்றை அப்புறப்படுத்தினர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story
  • chat