“பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க வாருங்கள்” விவசாயிகளுக்கு, கலெக்டர் அழைப்பு


“பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க வாருங்கள்” விவசாயிகளுக்கு, கலெக்டர் அழைப்பு
x
தினத்தந்தி 13 Jun 2017 8:30 PM GMT (Updated: 13 Jun 2017 12:21 PM GMT)

பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க வாருங்கள் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி அழைப்பு விடுத்துள்ளார்.

நெல்லை,

பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க வாருங்கள் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பயிர் விளைச்சல் போட்டி


நெல்லை மாவட்டத்தில் தற்போது கார் பருவ நெல் சாகுபடி செய்வதற்கு நாற்றுப்பாவும் பணி நடந்து வருகிறது. விவசாயிகள் கார் பருவத்தில் சாகுபடி செய்யும் நெற்பயிரில் வேளாண்மைத் துறை பரிந்துரை செய்யும் அனைத்து நவீன தொழில் நுட்பங்களை கடைபிடித்து அதிக மகசூல் பெறுவதற்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இவ்வாறு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சாகுபடி செய்து பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல முடியும்.

பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள விவசாயிகள் மாநில அல்லது மாவட்ட அளவு போட்டிகளில் கலந்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் மிக குறைவானது. நெல் பயிரில் மாநில அளவு பதிவுக்கட்டணம் ரூ.100, மாவட்ட அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள நெற்பயிருக்கு ரூ.50, பிற பயிர்களான மக்காச்சோளம், உளுந்து ஆகிய பயிர்களுக்கு ரூ.25 பதிவு கட்டணமாகும். மாநில மற்றும் மாவட்ட அளவு பயிர் விளைச்சல் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்படும். இப்போட்டிகளில் நில உரிமைதாரர்களும், குத்தகைதாரர்களும் கலந்து கொள்ளலாம்.

அறுவடை –கண்காணிப்பு

பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகளின் வயலில் 50 சென்ட் பரப்பில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டு மகசூல் கணிப்பு பதிவு செய்யப்படும். மாநில அளவில் அதிக மகசூல் பெறும் முதல் 2 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

நெல் பயிருக்கு மாநில அளவில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ. 15 ஆயிரமும் வழங்கப்படும். மக்காச்சோளம் மற்றும் உளுந்து பயிர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

இதேபோன்று மாவட்ட அளவில் அதிக மகசூல் பெறும் முதல் இரண்டு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். நெல் பயிருக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2–வது பரிசாக ரூ.10 ஆயிரமும், மக்காச்சோளம் மற்றும் உளுந்து பயிர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2–வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும்.

கலெக்டர் அழைப்பு

எனவே விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி, பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story