பெண் போலீசிடம் இருந்து எனது கணவரை மீட்டுத்தாருங்கள் போலீஸ் சூப்பிரண்டிடம், இளம்பெண் மனு


பெண் போலீசிடம் இருந்து எனது கணவரை மீட்டுத்தாருங்கள் போலீஸ் சூப்பிரண்டிடம், இளம்பெண் மனு
x
தினத்தந்தி 14 Jun 2017 1:30 AM IST (Updated: 13 Jun 2017 6:59 PM IST)
t-max-icont-min-icon

பெண் போலீசிடம் இருந்து எனது கணவரை மீட்டுத்தாருங்கள் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இளம்பெண் மனு கொடுத்தார்.

நெல்லை,

பெண் போலீசிடம் இருந்து எனது கணவரை மீட்டுத்தாருங்கள் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இளம்பெண் மனு கொடுத்தார்.

போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள இட்டமொழி வடக்கு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வி. இவர், 2 குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எனக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிறுதொண்டநல்லூர் மொட்டை தாதன்விளை வடக்கு தெருவை சேர்ந்த கதிரவனுக்கும் கடந்த 2012–ம் ஆண்டு இட்டமொழியில் உள்ள எனது வீட்டில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு கணவர் வீட்டில் குடும்பம் நடத்தினோம். எங்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

பெண் போலீசுடன் தொடர்பு

எனது கணவர் கதிரவன், திருச்செந்தூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்தார். மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியனில் போலீசாக பணிபுரிந்து வரும் சேர்மக்கனி, கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக திருச்செந்தூருக்கு வந்து சென்ற நேரத்தில் என்னுடைய கணவர் வேலை செய்த விடுதியில் தங்கி உள்ளார்.

அப்போது என்னுடைய கணவருக்கும், பெண் போலீசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். நாளடைவில் அவர்களது கள்ளத்தொடர்பு எனக்கு தெரிய வந்தது. இது குறித்து கணவரிடம் கேட்டபோது என்னை தகாத வார்த்தையால் பேசி மிரட்டினார். மேலும் என்னுடைய மாமியார் மாமியார் முத்துலெட்சுமி, நாத்தனார் குணசெல்வம், சிவபார்வதி ஆகியோரிடம் முறையிட்டபோது அவர்களும் என்னை மிரட்டுகின்றனர்.

மீட்டுத்தாருங்கள்

எனவே பெண் போலீசிடம் இருந்து என்னுடைய கணவரை மீட்டுத்தாருங்கள். மேலும் என்னுடைய கணவர் மற்றும் அவருக்கு உதவியாக இருக்கும் மாமியார், நாத்தானார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story